அன்னச்சின்னத்திற்கு புள்ளடியிட்டு சஜித்தை வெற்றியடைச் செய்யுங்கள்

வெள்ளை வான் கடத்தல் எனும் சொல் அனைவரும் அறிந்த ஒரு சொற்றொடராக மாறியுள்ளது. ஆங்கில மொழியில் கூட வைட் வானிங் எனும் ஒரு சொல்லாக அச்சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வெள்ளை வானை பிரசித்தப்படுத்தியவர் கோட்டாபய ராஜபக்ஷ என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மாபெரும் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு வருகைதந்த அவரை பெருந்திரளான மக்கள் ஒன்றிணைந்து வரவேற்றனர்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நேற்றுமுன் தினம் வெள்ளை வானை செலுத்திய சாரதி சொல்கிறார், கோட்டாபயவின் உத்தரவின் பேரிலே 300இற்கும் மேற்பட்டவரை கடத்தி முதலைகளுக்கு இரையாக கொடுத்தோம் என பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றார்.

2005 ஆம் ஆண்டு மஹிந்த வெற்றி பெற்ற பின்னர் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவரே கோட்டாபய ராஜபக்ஷ. இவர் உடனடியாக பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அவ்வாறு நியமிக்கப்பட்ட போதிலும் அவர் இலங்கை பிரஜையாக இருக்கவில்லை.

ஆனாலும் தான் இலங்கை பிரஜை என்பதற்குரிய ஆவணங்கள் இருப்பதாக சிலவற்றை காண்பித்தார். அந்த ஆவணங்கள் போலியானவை என குற்றப்புலனாய்வு துறை அறிக்கை ஒன்றை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் அப்போது அதனை நிராகரித்து இருந்தாலும் போலியான ஆவணங்களை சமர்ப்பித்தே இதனை பெற்றாரா என்பதை அறியும் பொருட்டு குற்றவியல் வழக்கை தொடர்ந்து நடத்தலாம் என சொல்லியது.

இந்நிலையில் இவர் இலங்கை பிரஜையினை இரண்டாம் தரம் பெற்றாரா என்பது ஒரு கேள்விக்குறி.

அமெரிக்கா பிரஜாவுரிமையினை உண்மையாகவே துறந்திருக்கின்றாரா என்பது இன்னுமொரு கேள்விக்குறி.

அப்படியான ஒருவரை நாம் தோற்கடிக்க வேண்டுமென்றால் செய்ய வேண்டியது ஒன்றேயொன்று மாத்திரமே. சிலர் சொல்வதுபோல் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலமோ அல்லது தேர்தலை புறக்கணிப்பதன் மூலமோ அது முடியாது. அப்படி செய்தால் மறைமுகமாக கோட்டாபவிற்கு வாக்களிப்பதற்கு சமம். ஆகவே நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து அன்னச்சின்னத்திற்கு நேரே புள்ளடியினை இடுவதன் மூலம் பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கும் சஜித் பிரேமதாசாவை வெற்றியடைச் செய்யுங்கள் என்று கூறினார்.

சஜித் பிரேமதாசாவை நீங்கள் ஜனாதிபதியாக மாற்றுங்கள். அவர் சொன்னவற்றை செய்ய வைக்கும் முழுப்பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை