தேசிய பட்டியலுக்காக ​கோட்டாவை ஆதரிப்பது சமூகத்தை விற்றுப்பிழைக்கும் செயல்

ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகள் தேசியப் பட்டியல் பதவிக்காக ​கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பது, முஸ்லிம் சமூகத்தை விற்றுப்பிழைக்கும் செயலாகும் என இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (10) ஒலுவிலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அன்று ஆர்.பிரேமதாசாவை ஜனாதிபதியாக்கியவர் எமது மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப், அதேபோல்தான் நாங்கள் இன்று அவருடைய மகன் சஜித் பிரேமதாசவை தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையின் கீழ் ஜனாதிபதியாக்குவோம்.

இந்தத் தேர்தல் சஜித்துடைய தேர்தல் அல்ல. முஸ்லிம் காங்கிரஸுடைய தேர்தல். இந்தத் தேர்தலில் நாங்கள் தோல்வியடைந்தால் முஸ்லிம் சமூகம் பெரும் ஆபத்தை எதிர்நோக்கும். நாங்கள் மைத்திரியை வெல்ல வைப்பதற்காக 85 வீதமான வாக்குகளை அளித்தோம். அந்த வேகம் இப்போது குறைந்துள்ளது.

கோட்டா தரப்பு முஸ்லிம்களின் வாக்களிக்கும் வீதத்தைக் குறைப்பதற்குத் திட்டமிட்டு செயற்படுகின்றனர். பிரதேச உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து வாக்களிப்பைக் குறைக்குமாறு கூறி இருக்கின்றார்களாம்.

அவர்களுக்குத் தெரியும் முஸ்லிம்கள் கோட்டாவுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று. வாக்களிப்பை குறைத்தால் சஜித்துக்குச் செல்கின்ற வாக்குகளே குறையும் என்று அவர்களுக்குத் தெரியும். இந்த சதிக்குள் யாரும் சிக்கிவிட வேண்டாம்.

எமது வாக்களிப்பு வீதம் 90 ஆக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம்களின் நிலைமை மிக மோசமாக மாறிவிடும்.இதை நீங்கள் நினைவில் வைத்திருங்கள்.

ஹிஸ்புல்லாஹ் அவரது பல்கலைக்கழகத்தை காப்பாற்றுவதற்காகவும், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பெறுவதற்காகவும் பாடுபடுகின்றார். தனித்துப் போட்டியிட்டு கோட்டாவுக்கு இரண்டாவது விருப்பு வாக்கைப் பெற்றுக்கொடுக்கும் வேலையில் அவர் இறங்கி இருக்கிறார். இது எமது சமூகத்துக்குச் செய்யும் சதியாகும்.

கோட்டா இப்போது எமது மக்களுக்கு ஆதரவாக எது வேண்டுமானாலும் சொல்வார். ஆனால், அவர் வென்ற பின் மாறிக்கொள்வார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வர விரும்புபவர் கோட்டாபய ராஜபக்ஷ. ஒரு நாடு ஒரு சட்டம் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். எங்களது இஸ்லாமிய சட்டத்தில் கை வைப்பதுதான் இந்த ஒரு நாடு ஒரு சட்டம் என்பது.

திருமணச் சட்டம், ஹாதிச் சட்டம் எல்லாவற்றிலும் கை வைப்பதுதான் நோக்கம். முஸ்லிம் எம்.பிக்களாகிய நாங்கள் இதைப் பாதுகாப்பதற்காக பாராளுமன்றில் போராடி வருகிறோம். 21 எம்.பிக்களும் ஒன்றிணைந்து நின்று இது தொடர்பில் பலருடன் பல சந்திப்புக்களை நடத்தியுள்ளோம்.

முஸ்லிம்கள் குறிப்பாக இளைஞர்கள் நன்கு சிந்திந்து சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்து, நாட்டின் அரசியலில் முஸ்லிம்களும் பங்காளிகளாகி முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழக் கூடிய சூழ் நிலையை உருவாக்க வேண்டுமென்றார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை