வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்தும் பணி ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளை முதலாவது அமைச்சரவையிலிருந்தே நடைமுறைப்படுத்தப்போவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி அரசாங்க அதிகாரிகளை பாதுகாப்பதற்கு புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் ரண்வெலகெதரவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய அறநெறி பாடசாலைக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வின் போதே  பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேற்படி பாடசாலை , வர்த்தகரான ரஞ்ஜித் வீரசிங்கவின் நன்கொடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இங்கு மேலும் தெரிவிக்கையில்;

நாம் எமது ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தினால் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தினோம். எனினும் கடந்த அரசாங்கத்தில் சிறந்த அதிகாரிகள் பழிவாங்கப்பட்டனர். அத்தகைய நிலையிலிருந்து அரச அதிகாரிகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காக அது தொடர்பில் விசேட சட்டம் கொண்டு வரப்படவேண்டும். அதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

இது தற்காலிக அரசாங்கம். எமக்குப் பாரிய பொறுப்புகள் உள்ளன. இது 15 அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம்.

15 அமைச்சர்களை தெரிவுசெய்வதில் சிரமங்கள் உள்ளன. அமைச்சரவை 15 ஆக குறையும் போது மாகாண சபை 4 இல் 1 ஆக குறையும். இதன் போது பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் அறிவோம்.

தகுதியானவர்கள் இருக்கின்றார்கள். தகுதியானவர்களுக்கு இந்த 15 ஆல் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களது வேதனையை நாம் அறிவோம். இருப்பினும் நாட்டுக்கு நன்மை கிடைக்குமாயின் நாட்டுக்காக அவர்கள் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர். அதனை நாம் பாராட்டுகின்றோம்.

மக்களின் நலனுக்காக நாம் அனைத்தையும் செய்ய தயாராக உள்ளோம். தற்பொழுது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியை விட எதிர்க் கட்சி அங்கத்தவர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிலையில் நாம் பொதுத் தேர்தலுக்கு செல்லவுள்ளோம். எதிர் கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.

மக்கள் எமக்கு ஆணை வழங்கியுள்ளனர் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் வீதி அபிவிருத்தி, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்(ஸ)

 

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை