ஜனநாயகத்திற்கு முரணாக செயற்படும் நிலை உருவாகாது

இராணுவ நிர்வாகம்  ஏற்படுத்தப்படுமென்பது  அப்பட்டமான பொய்

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன

நாட்டில் இராணுவ நிர்வாகம் ஏற்படுத்தப் போவதாக பரப்பும் பொய்ப் பிரசாரத்தில் எந்தவித உண்மையும் கிடையாது என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதற்காக முப்படையினரை கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், பொதுவான சட்டவரையறைகளின் கீழ்

பொலிஸாரே பயன்படுத்தப்படுவார்கள். சட்டம் ஒழுங்கை பேணும் பொறுப்பு பொலிஸாருக்கே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைதியை குழப்பும் நிலைமைகளில் பொலிஸாரினால் அதனை கட்டுப்படுத்த முடியாவிட்டால் விசேட அதிரடிப்படை அழைக்கப்படும். அவர்களினாலும் முடியாத போதே இராணுவம் பாதுகாப்பிற்கு அழைக்கப்படும். நாட்டின் ஜனநாயகத்தை பேணிப்பாதுகாக்க அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஜனநாயக நாடாகவே எமது நாடு தொடர்ந்து செயற்படும். இன, மத,கட்சி ரீதியில் எவருக்கும் அநீதி ஏற்பட இடமளிக்கப்படமாட்டாது. அனைவரும் கௌரவமாக வாழும் நிலை உருவாக்கப்படும் என்பதை உறுதிபட கூறியிருக்கிறோம். சிலர் குற்றஞ்சாட்டுவது போன்று ஜனநாயகத்திற்கு முரணாக செயற்படும் நிலை உருவாகாது. என்பதை உறுதியாக தெரிவிக்கிறோம் என்றும் கூறினார்.

அரசியல் காரணங்களுக்காக ஏற்படும் மோதல்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சியில் போதைவஸ்து பிரச்சினையும் பாதாள உலக குற்றச் செயற்பாடுகளும் ஒழிக்கப்படும் அதேநேரம் ஊழல் மற்றும் பொது மக்களின் பணத்தை துஷ்பிரயோகம் செய்யும் நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறினார்.

புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் அனைத்து வகை ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பொது மக்களின் நிதியை தவறாக பயன்படுத்துதல் ஆகியவை சமூகத்தில் இருந்து ஒழிக்கப்படும்.

அதேநேரம் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின் நடத்தப்படும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 160 ஆசனங்கள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். நீதியும் நேர்மையுமான அரசாங்கமொன்று ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற தொனிப் பொருளில் உருவாக வழி வகுக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

போதைவஸ்து பிரச்சினையை ஒழிப்பதற்கான திட்டம் முப்படையினர் மற்றும் பொதுமக்களின் இணைத்திட்டமாக மேற்கொள்ளப்படும் என்று பதில் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன மற்றும் அதிரடிப்படையின் ஆணையிடல் அதிகாரியான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் மற்றும் பொலிஸ் போதைப் பிரிவின் அதிகாரிகளை சந்தித்த அடுத்த நாளன்றே பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இந்த அறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்கு ஆயுதப் படையினரை ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், அந்த செயற்பாடு பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பாக வெளியிடப்பட்டதேயன்றி இராணுவ நிர்வாகத்தை மேற்கொள்ளும் வகையில் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாக குறிப்பிட்டார். ‘எந்தவொரு நபருக்கோ, எந்தவொரு அரசியல் கட்சியை சேர்ந்தவருக்கோ, எந்தவொரு மதத்தையோ அல்லது இனத்தையோ சேர்ந்தவருக்கோ எந்த தீங்கும் ஏற்படாத சூழலை நாம் உருவாக்குவோம் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். எந்த ஒருவரும் கௌரவமாக வாழும் சூழலை நாம் ஏற்படுத்துவோம்’ என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன குறிப்பிட்டார். இதேவேளை, முப்படையினரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்துவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் ​நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் நாட்டின் அமைதியைக் காக்கும் பொருட்டு முப்படை அழைக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. 22 நிர்வாக மாவட்டங்களுக்காக படையினர் அழைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை நாட்டில் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்தும் முயற்சி என சில தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையிலே பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.(பா)

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை