மூவருக்கு எதிராக ரெலோ அமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

ரெலோ அமைப்பினால் மூவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

திருகோணமலையில் நேற்றுமுன்தினம் (23) ரெலோ அமைப்பின் மத்திய குழுக் கூட்டம் இடம்பெற்று முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

ரெலோ அமைப்பின் செயலாளர் ஸ்ரீகாந்தா, யாழ் மாவட்ட செயலாளர் சில்வஸ்டார் மற்றும் யாழ் துணை மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன் ஆகிய மூவருக்கு எதிராகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு மாறாக நடந்து கொண்டமை என்ற குற்றச்சாட்டின் பெயரில் இவர்களுக்கு எதிராக விசாரணையின் பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தேர்தல் காலங்களின் போது சில அசம்பாவிதங்களும் விதி மீறல்களும் இடம்பெறுவது வழக்கம், அந்த வகையில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கட்சியினுடைய அனுமதியில்லாது பொதுத் தேர்தலில் போட்டியிட்டது தொடர்பில் அவருடைய அடிப்படை அங்கத்துவ உரிமையில் தானாக விலகிக் கொண்டார் என கருதப்படுகின்றது.

ஆனாலும் எம்.கே. சிவாஜிலிங்கம் என்பவரை ஒரு பொதுவேட்பாளராக ஏற்றுக் கொண்டோம் அவரை ஆதரிக்கும் படி பிரசாரம் செய்தமை கட்சியினுடைய ஒழுக்க விதிகளுக்கு முரணானது என்ற குற்றச்சாட்டில் ஸ்ரீகாந்தா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் குழு தீர்மானித்துள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், திருகோணமலை நிர்வாக செயலாளர் நித்தி மாஸ்டர் மற்றும் அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

ரொட்டவெவ குறூப் நிருபர்

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை