இனவாதிகளின் கைகளுக்குள் நாடு மீண்டும் சிக்கினால் சிறுபான்மையினரின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடும்

இனவாதிகள் கூட்டுச் சேர்ந்துள்ள அணியை ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று முல்லைத்தீவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றியஅமைச்சர்:

சிறுபான்மை மக்களை "வந்தான் வரத்தான்" எனக் கருதும் இனவாதிகளுக்கு இந்த தேர்தலில் நாம் ஒன்றுபட்டு பாடம் புகட்டுவோம். நமது சமூகம் தன்மானத்துடனும், தலைகுணிவின்றியும் வாழவேண்டும் என்பதற்காகவே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம்.

கடந்த ஒரு தசாப்த காலமாக இனவாதிகள் சிறுபான்மை மக்களை கொடுமைப்படுத்தினர், கொச்சைப்படுத்தினர்.

மதக்கடமைகளுக்கு தடைவிதிக்கின்றனர். மதத் தலங்களை உடைக்கின்றனர். எங்களை தீவிரவாதிகளாகவும், இனவாதிகளாகவும் சித்தரித்து நாட்டில் பெரும் பிரளயம் ஒன்றை கிளப்பிவருகின்றனர்.

சிறையில்வாடும் தமிழ் இளைஞர்களை விடுவிக்கச்சொல்லி கோரிக்கை விடுத்தால் அதனை இனவாதமாக பெரும்பான்மைச் சமூகத்தில் காட்டுகின்றனர். காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத்தருமாறு கேட்டால் அதுவும் அவர்களால் இனவாதமாக பார்க்கப்படுகின்றது.

நாங்கள் எவருக்கும் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழவேண்டிய அவசியம் கிடையாது.

தன்மானத்துடனும் சுயகெளரவத்துடனும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கு நாம் உரித்துடையவர்கள்.

அவ்வாறான ஒரு சூழலை ஏற்படுத்துவதற்கு நல்ல ஒரு தலைவனாக சஜித் பிரேமதாசவை இனம்கண்டுள்ளோம்.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை