தேசிய பொருளாதார திட்டத்திற்கும் அமெரிக்க ஒப்பந்தத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை

தேசிய பொருளாதார திட்டத்திற்கும் அமெரிக்காவுடனான எம்.சி.சி.(மிலேனியம் சவால்) ஒப்பந்தத்திற்கு மிடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பொருளாதார திட்டத்தை நாம் முன்னேற்றி அமுல்படுத்த இருப்பதாக கூறிய அவர் இதனூடாக கொழும்பிற்கும் திருகோணமலைக்கும் இடையில் வேலி அமைத்து அமெரிக்க படையினரை அவற்றின் வாயில்களில் இடப்போவதாக கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளை எதிரணி முன்வைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வொக்சோல் வீதியில் உள்ள ஐ.தே.க தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய அவர், எம்.சி.சி ஒப்பந்தத்தினூடாக போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கும் காணி பிரச்சினைக்குமே தீர்வு காணப்பட இருக்கிறது. பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றி வெளிப்படைத் தன்மையுடனே இந்த திட்டம் செய்படுத்தப்படும் எனவும் கூறினார்.

மேலும் குறிப்பிட்ட அவர்,

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து மக்களின் வாக்குகளை பெற எதிரணி கீழ்த்தரமான முயற்சியில் இறங்கியுள்ளது. நாட்டை மூன்றாக துண்டாடப் போவதாகவும் வேலி அமைத்து அவற்றின் வாயில்களை அமெரிக்க படைகளுக்கு வழங்க தயாராவதாகவும் பொய்மூட்டைகளை அடுக்கியுள்ளனர்.

தேசிய பௌதீக திட்டம் 2008 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் விமல் வீரவன்சவினால் ஆரம்பிக்கப்பட்டது. 2011 இல் இது வர்த்தமானியில் வௌியிடப்பட்டது.

இதனை தான் எமது அமைச்சு முன்னெடுக்கிறது. சுமார் 3000 பேரடங்கிய உயர்மட்ட நபர்களின் பங்களிப்புடன் இது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு இவ்வருட ஆரம்பத்தில் வௌியிடப்பட்டது.இதனூடாக சுற்றாடல் ரீதியில் பேணவேண்டிய பகுதிகள்,குடியேற்றங்களுக்கு உகந்த இடங்கள்,முன்னேற்றப்பட ​வேண்டிய பகுதிகள்,போக்குவரத்து மேம்படுத்த வேண்டிய பிரதேசங்கள் என அடையாங்காணப்பட்டுள்ளன.பிரதான பொருளாதார வலயங்களும் இனங்காணப்பட்டுள்ளன.அமெரிக்க முகவர்களோ சி.ஐ.ஏ வோ இதனை தயாரிக்கவில்லை.இது தொடர்பில் எவருடனும் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம்.

எம்.சி.சி. ஒப்பந்தத்தினூடாக 12 இலட்சம் ஏக்கர் காணியை ஒரு ​பேர்ச் 180 ரூபா வீதம் அமெரிக்காவிற்கு வழங்கப் போவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால் இது தொடர்பான ஒப்பந்த நகலில் இது பற்றி ஒருவசனம்கூட கிடையாது.இந்த ஒப்பந்தத்தினூடாக இலங்கைக்கு 480 மில்லியன் டொலர்கள் கிடைக்கும்.நாட்டின் அரசியலமைப்பிற்கும் சட்டங்களுக்கும் உட்பட்டதாகவே ஒப்பந்தம் அமையும்.பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றே இதனை அமுல்படுத்துவோம்.

 

ஷம்ஸ் பாஹிம்

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை