தேசிய பாதுகாப்புக்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கே முன்னுரிமை

புதிய கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும

தேசிய பாதுகாப்புக்கு அடுத்தபடியாக கல்வித்துறைக்கே முன்னுரிமையளிக்கப்படுமென புதிய கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

நேற்று அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் கூறியதாவது:-

கல்வித் துறையின் முன்னேற்றத்தினூடாகவே நாட்டில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

அதன்பொருட்டு விரைவான பயணத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எமது நாட்டில் இன்றும் கூட பெரும்பான்மையான பாடசாலைகள், வகுப்பறைகள் 19ஆம் நூற்றாண்டின் நிலையிலேயே காணப்படுகின்றன. ஆசிரியர்கள் 20 ஆம் நூற்றாண்டு நிலையில் இருக்கின்றனர். இதனால் 21 ஆம் நூற்றாண்டு மாணவச் செல்வங்களுக்குரிய கல்வியைப் பெற்றுக்கொடுப்பது பெரும் சிக்கலாகவே உள்ளது. இந்த விடயத்தை ஆழமாக ஆராய்ந்து உரிய தீர்வுகளை எட்டவேண்டியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறக்கண்ணாடி அணிந்து எவரையும் பார்க்க முற்படவில்லை. கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று நாடு, மக்கள் என்ற ஒரே நிலைப்பாட்டையே அவர் கொண்டிருக்கின்றார். கடந்த காலங்களில் பச்சைக் கட்சி ஆட்சிக்கு வரும் போது நீலக்கட்சியினர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். நீலக் கட்சி வந்து பச்சைக் கட்சியினரை பழிவாங்கினர். இந்த முறைகேடான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி உறுதிபூண்டிருக்கின்றார். திறமையானவர்களையும் கடமையை சரிவரச் செய்பவர்களை மட்டுமே நாம் அடையாளம் காண்போம். இதில் கட்சிவேறுபாடோ, இன, மத, மொழி வேறுபாடோ காட்டப்படமாட்டாது.

எம்.ஏ.எம். நிலாம்

Sat, 11/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை