வாக்குறுதிகள் நிறைவேற்றுவதே இடைக்கால அரசின் பொறுப்பு

விரைவில் பொதுத் தேர்தல்

* அரச நிறுவனங்களின் தலைமை பதவிகளுக்கு தகுதியானவர்கள் மட்டுமே
* திங்களன்று இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்

அரசியலமைப்பினூடாக கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே மக்களின் கருத்தறியும் நோக்குடன் பொதுத் தேர்தலை விரைவில் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் நடைபெறும் வரையான காலப்பகுதிக்கே இந்த இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இடைக்கால அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும் என்றும் கூறினார்.

கடந்த காலத்தில் நாட்டில் நிலவிய அரசியல் கலாசாரம் தொடர்பில் பொது மக்கள் அதிருப்தியில் இருந்தனர். புதிய யுகத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும். அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு தகுதியும், நிபுணத்துவம் மற்றும் அறிவுத்திறனுடையவர்களை நியமிக்க ஒத்துழைக்க வேண்டும்.

அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும்போது வறுமை நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதால் அவர்களை வறுமையிலிருந்து விடுப்படசெய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ‘சுபீட்சமான நோக்கு’ என நாம் முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட்டு எமது அரசாங்கம் நிறுவப்படுமென கூறியிருந்தோம். அதற்காகவே மக்கள் ஆணையை கோரினோம். ஆகவே, அரசியலமைப்பு ரீதியாக எமக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மக்களின் விருப்பத்துக்கு அமைய பொதுத் தேர்தலொன்றுக்கு விரைவில் செல்வோம். இந்த இடைப்பட்ட காலத்தில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைத்துள்ளோம்.

இக்காலப்பகுதியில் நாம் அமைத்துள்ள இடைக்கால அரசாங்கம் பிரதானமாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் அரசாங்கமாக இருக்கும். அதனால் தான் 15 பேர் கொண்ட அமைச்சரவையை அமைத்துள்ளோம். மக்கள் பாரிய எதிர்பார்ப்பில்தான் எமக்கு அதிவிசேட வெற்றியை வழங்கினர். எமக்கு முன்பு பாரிய சவால்கள் உள்ளன. இந்தச் சவால்களை வெற்றிகொள்வதை போன்று மக்களின் எதிர்பார்ப்புகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

புதிய யுகத்தை நோக்கிச் செல்லும் இந்தக் காலப்பகுதியில் முழுமையாக எம்மை அர்ப்பணித்து மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளை செயற்படுத்த அனைவரது ஒத்துழைப்புகளையும் எதிர்பார்க்கின்றேன்.

விசேடமாக அமைச்சரவையை 15 பேருக்கு மட்டுப்படுத்தியுள்ளோம். அமைச்சர்களின் கீழ் இராஜாங்க அமைச்சர்களையும் நியமிக்கவுள்ளோம். அமைச்சுக்களை அனைவரும் தமது கடமைகளை நிறைவேற்றும் வகையிலேயே ஒழுங்கமைத்துள்ளோம். இராஜாங்க அமைச்சர்களுக்கும் அவர்களது பணியை செய்வதற்கு அமைச்சர்கள் முழுமையாக அதிகாரத்தை வழங்க வேண்டும். கடந்த காலத்தில் வெறும் கையெழுத்திடும் அமைச்சர்களாக இராஜாங்க அமைச்சர்கள் இருந்தனர். நாம் முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின்படி அனைத்து அமைச்சர்களையும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்.

பெரும்பாலான அரச நிறுவனங்களும் கூட்டுத்தாபனங்களும் நட்டமீட்டுபவையாகவே உள்ளன. அனைத்து அரச நிறுவனங்களையும் கூட்டுத்தாபனங்களையும் இலாபமீட்டுபவையாகவும் திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாதவையாகவும் மாற்றியமைக்க வேண்டும். இதனை செய்ய முடியும். இவற்றுக்குத் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையை நியமிக்கும் போது அந்த செயற்பாட்டை செய்யக்கூடிய தகுதியுடையவர்களை நியமிக்க வேண்டும். திறனை போன்று தொழில் நிபுணத்துவம் உள்ள தலைவர்களையும், நிறைவேற்றுப் பணிப்பாளர்களையும் நியமிக்க வேண்டும்.

எமது கொள்கைப் பிரகடனத்தில் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளோம். அதற்காக தேர்வுச் சபையொன்று நிறுவப்படுமெனவும் கூறியுள்ளோம். அமைச்சர்களிடம் நான் விடுக்கும் கோரிக்கையானது, நிறுவனங்களுக்கு தகுதியும் நிபுணத்துவமும், திறமையும் உள்ளவர்கள் இருந்தால் எமது தெரிவு சபைக்கு அவர்களது பெயர்களை அனுப்ப வேண்டுமென வேண்டுகிறேன். மேற்படி நிறுவனங்களை செயற்திறன் மிக்க சேவையை வழங்குபவையாகவும் இலாபமீட்டுபவையாகவும் மாற்றியமைக்க இது முக்கியத்துவம் வாய்ந்தது.

அதேபோன்று, அமைச்சுக்களில் நிலவும் நிபுணத்துவம் அவசியமற்ற வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கும் போது ஒரு விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கடந்த காலத்தில் அமைச்சரின் தொகுதியில் அவருக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. உண்மையில் அவ்வாறான நியமனங்கள் மிகவும் வறுமையாகவுள்ளவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். வறுமையிலிருந்து நாம் விடுபட வேண்டுமென்றால் அவர்களுக்குதான் இந்த வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டும். உயர் தகுதியுடையவர்கள் அவ்வாறான வெற்றிடங்களுக்கு நியமிக்கப்பட்டால் அந்தக் கடமை நிறைவேற்றப்படாது. இது அனைவருக்கும் தெரியும். வைத்தியசாலைகள், பாடசாலைகள் என அனைத்துத் துறைகளிலும் நிபுணத்துவம் அவசியமற்று காணப்படும் வெற்றிடங்கள் அனைத்துக்கும் அந்தந்த தொகுதிகளில் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு நியமனம் வழங்கப்பட வேண்டும்.

வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கான உரிமையை அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும். ஆகவே, இந்த வெற்றிடங்கள் தொடர்பிலான தகவல்களை ஜனாதிபதி செயலகத்திற்கு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றேன். அதன்மூலம் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த பணியை செய்யும் வாய்ப்பை வழங்க முடியும்.

எதிர்வரும் திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொடுக்க வுள்ளோம். 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வரையறைக்குள்தான் அமைச்சர்களை நியமிக்க முடியும். இந்த 16 பேர்கொண்ட அமைச்சரவையை தெரிவுசெய்ய பாரிய சிரமங்கள் இருந்தன. என்றாலும், எம்முன் உள்ள சவால்களை வெற்றிகொள்ள வேண்டியுள்ளது. விரைவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை வெற்றிக்கொள்வது மிகவும் அவசியமாகவுள்ளது. ஆகவே, எனக்கும், பிரதமருக்கும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Sat, 11/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை