தோல்விக்கு கூட்டு பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டும்

பௌத்த, சிங்கள மக்களின் மனங்களை வெற்றி கொள்ள நாம் தவறிவிட்டோம்

ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளர் வெற்றியீட்டுவதை தடுக்கும் விதத்தில் தான் செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்றாக நிராகரித்துள்ளார்.

ஐ.தே.க.வின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. இந்த தேர்தல் தோல்விக்கான கூட்டுப் பொறுப்பை அனைவரும் ஏற்கவேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் குறிப்பிட்டதாவது,

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில் தான் நடந்து கொண்டதாக என் மீது குற்றம் சுமத்துகின்றனர். இதனை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெற்றி இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு திறமை மிக்க இளம் தலைவர்களை உள்வாங்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது ஸ்ரீகொத்தவும், கட்சியின் செயற்பாடுகளையும் சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர். இது தவறானதொன்றாகும். வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை பிரேரித்தது கூட நான் தான். ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் பிரசாரப் பணிகளை முன்னெடுத்தோம்.

வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகளை முழுமையாக ஈர்த்தெடுக்கும் பொறுப்பை பேற்றேன். அதனை முழுமையாக நிறைவேற்றியுள்ளேன். தெற்கு சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதில் நாம் பின்னடைவைக் கண்டோம் அதன் காரணமாகவே தோல்வியடைந்தோம். முன்னொரு போதும் இவ்வாறு நடக்கவில்லை. இது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த வாக்குகளை நாம் இழந்துள்ளோம். இதற்கான காரணிகளை கண்டறிய வேண்டும். இதற்காக ஒருவருக்கொருவர் விரல் நீட்டிக் கொண்டிருப்பதால் எதுவித பயனும் கிடையாது. கட்சி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்கின்றேன். வீண் பழிசுமத்துபவர்களின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இனி நாம் எதிர்காலம் பற்றியே சிந்திக்க வேண்டும். மீண்டும் கட்சியை பலப்படுத்த வேண்டும். முரண்பாடுகளை தோற்றுவித்து கட்சியை பலவீனப்படுத்த எவருக்கும் இடமளிக்கப்படக் கூடாது. இளம் தலைவர்களை உள்வாங்கி அவர்களின் பயணத்தில் நாமும் இணைந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தை வெற்றி கொள்ளக் கூடிய தலைமையை உருவாக்க வேண்டும். அவரது வழிகாட்டலில் எமது பயணத்தை தொடர வேண்டும் என்றார்.

எம்.ஏ.எம். நிலாம்

 

Sat, 11/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை