பொதுமக்கள் ஒன்றிணைந்தால் மாத்திரமே டெங்கு ஒழிப்பு சாத்தியம்

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

கல்முனைப் பிராந்தியத்தில் ​டெங்கு நோயினால் இன்று வரை 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே டெங்கு ஒழிப்பு சாத்தியமாகும் என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ெடாக்டர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சுகாதாரசேவை பணிமனையினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மற்றும் மாணவர்களைப் பாராட்டும் பரிசளிப்புவிழா நேற்று (28) காரைதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட மூன்று டெங்கற்ற பாடசாலைகள் மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசுவழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

காரைதீவுக் கோட்டத்திலுள்ள 10 பாடசாலைகளும் பரிசோதிக்கப்பட்டது இதில் 3 பாடசாலைகள் டெங்கற்ற பாடசாலையாக தெரிவுசெய்யப்பட்டன.

முதலாம் இடத்தை காரைதீவு கண்ணகி இந்துவித்தியாலயம் பெற்றுக்கொண்டது. தொடர்ச்சியாக 3ஆவது தடவையாக இப்பாடசாலை முதலாமிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

டெங்கு தொடர்பில் மாணவரிடையே புத்தாக்கபோட்டியும் வீடியோ கிளிப் போட்டியும் நடாத்தப்பட்டன. அப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற வெற்றியாளர்கள் பரிசு வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

முதல் பரிசாக 5000 ரூபாவும் இரண்டாம் பரிசாக 3000 ரூபாவும் மூன்றாம் பரிசாக 2000 ரூபாவும் மாணவர்களுக்கு வழங்கி ஊக்குவிக்கப்பட்டன. அவர் மேலும் பேசுகையில்: டெங்கு முழுநாட்டிற்குமே ஒரு சவாலாக காணப்படுகிறது. அதற்கு நாம் பலரை பலிகொடுத்திருக்கிறோம். அது ஆட்கொல்லி நோய்.

மழைக்கு பின்னர் சடுதியாக எமது பிரதேசத்தில் அதிகரித்திருக்கிறது. அதற்கு நாம் தயார் நிலையிலிருக்கவில்லை என்றே கருதுகிறேன்.

மாணவர் மத்தியில்இது தொடர்பான விழிப்புணர்வை எற்படுத்துவதனூடாக முழு வீடுகளுக்கும் அச்செய்தி செல்லும். அதனூடாக நாடு காப்பாற்றப்படும்.

சுகாதார திணைக்களம் நாடளாவிய ரீதியில் டெங்குநோயைக் கட்டுப்படுத்தும் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தைப் பரவலாக முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஓரங்கமாக இவ்வேலைத் திட்டங்களில் தங்களை அர்ப்பணித்து நோயைக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம்காட்டி முன்னணியில் திகழும் நிறுவனங்கள், மாணவர்கள், பொதுமக்களைப் பாராட்டி, பரிசளிப்புவிழாவும் நடாத்தப்பட்டு வருகின்றன. பிரதேச மட்டத்தில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் சுகாதாரத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாவட்ட மட்ட, மாகாண மட்ட,தேசியமட்ட போட்டிகளில் கலந்துகொள்ள தகுதிபெறுவார்கள் என்றார்.

(காரைதீவு குறூப் நிருபர்)

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை