சிங்கள மக்களின் வாக்குகளே தமிழர்களை காப்பாற்றியுள்ளன

தமிழ் தேசிய தலைவரென்ற தகுதி வேறு யாருக்குமில்லை

தமிழ் தேசியத்தின் தலைவர் எனும் தகுதி புலிகளின் தலைவருக்கு மட்டுந்தான் உள்ளது. வேறு எந்த ஒருவருக்கும் தமிழ் தேசிய தலைவர் எனக் கூறுவதற்கு தகுதியில்லை என முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான வி.முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பு திக்கோடை பிரதேசத்தில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வெற்றி தோல்வி பற்றி ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டம் கட்சியின் பிரதி தலைவர் விக்கினேஸ்வரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

வெல்லக் கூடிய அணியுடன் பயணிப்போம் என்று

நாங்கள் கூறினோம். அதில் பயணிக்கின்ற போது தான் நாங்கள் வாதிட்டு எமது உரிமைகளை கேட்பதற்கான வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டோம். ஆனால், மக்கள் தெளிவடையவில்லை.

சஜித் பிறேமதாசாவை கொண்டு வந்திருந்தால், இன்று கிழக்கில் தமிழன் இருந்திருக்க முடியாததுடன் பாரிய பின்னடைவுகளை சந்திக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால், இன்று சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். கடந்த காலத்தில் 6 ஜனாதிபதி தேர்தல் நடந்திருக்கின்றது. அந்த ஜனாதிபதியை சிறுபான்மை மக்களின் வாக்குகள் நிர்ணயித்தது. ஆனால், இன்றைக்கு பெரும்பான்மை மக்கள் மட்டும் போதும். வேறு இனம் தேவையில்லை என்ற கட்டத்திற்கு இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது.

எனவே, நாங்கள் தவறுகளை எவ்வாறு திருத்தப்போகின்றோம்? எதிர்காலத்தில் இவ்வாறு பிழையை விட்டுவிட்டு வந்து வேலைவாய்ப்பு தா, பாலம் கட்டித்தா, வீதியைப் போட்டுதா என்றால் யார் போடுவது? நாங்கள் வாக்களித்தால் தான் உரிமையோடு கேட்கலாம்.

2010 ஆம் ஆண்டு தேர்தலில் சரத்பொன்சேக்காவுக்கு வாக்களித்தாலும் பிரதமர் மஹிந்த எங்களை புறக்கணிக்வில்லை. 3200 பட்டதாரிகளுக்கு எனது கையால் வேலைவாய்ப்பு வழங்கினேன். அவ்வாறே அதிகமான சிற்றூழியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினோம். பாலங்களை கட்டினோம். மின்சாரம் வழங்கினோம். இவ்வாறு பாரிய அபிவிருத்தியை செய்தோம்.

எனவே, எதிர்வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சிறந்த முடிவுகளை எடுக்கவேண்டும். அதேவேளை, எமது சமூகத்தை இன்றில் இருந்து தெளிவாக்க வேண்டும் அல்லது ஏமாற்றிவிடுவார்கள், என்றார்.

கல்லடி குறூப் நிருபர்

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை