ஒட்டக சின்னமே நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும்

நாட்டினுடைய ஜனாதிபதி யார் என்பதை எமது ஒட்டக சின்னம்தான் தீர்மானிக்கும் என ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

மருதமுனையில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் திங்கட்கிழமை (11) தனியார் வரவேற்பு விடுதியில் நடைபெற்றது. அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

நாட்டின் வரலாற்றில் முஸ்லிம் சமூகம் எதிர்க் கட்சியில் இல்லாத அரசு என்றால் அது தற்போதைய அரசாங்கம் தான். மொத்த 21 பேரும் அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும் அரை அமைச்சர்களாவும் இருக்கின்ற போதுதான் இந்த முஸ்லிம் சமூகம் இவ்வளவு அடி வாங்கியது. நமது சமூகத்தின் பிரச்சினைகளை பேசுவதற்கு நாம் அச்சப்பட வேண்டிய எந்த தேவையும் கிடையாது.

சஜித் பிரமதாசவுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர்களான ரவூப்ஹக்கீம், றிஷாட் பதியுத்தீன் ஆகியோரது புகைப்படங்களுடன் பத்திரிகையில் செய்தி வந்தது. அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் நேரடியாக தேர்தல் மேடைகளில் 'நாளை வெளிவருகின்ற தேர்தல் விஞ்ஞாபனத்திலே முஸ்லிம்களின் பாதுகாப்பு உடபட சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு சொல்லப்பட்டுள்ளது' என்றார்.

ேநான் 4 மணித்தியாலங்களை செலவு செய்து 94 பக்கங்களை கொண்ட சஜித் பிரமதாசவுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசித்தேன்.

மலையக தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு முழுபக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. தமிழர்களின் சமஷ்டி ஆட்சி பிரிக்கப்படாத நாட்டில் சமஷ்டி ஆட்சி வழங்கப்படும் என்ற அளவுக்கு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றியோ அல்லது பாதுகாப்பு பற்றியோ ஒரு வார்த்தை கூட அந்த விஞ்ஞாபனத்தில் சொல்லப்படவில்லை.

இந்தத் தேர்தலானது மொத்த முழு முஸ்லிம்களினதும் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற தேர்தலாகும்.

அதனால் தான் நாம் 'நமது கனவு' என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டோம். இதில் நாம் தனிநாடு கேட்கவில்லை, வடக்கையும் கிழக்கையும் இணைக்கச் சொல்லவும் இல்லை. நாம் கேட்பதெல்லாம் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ வேண்டும். வியாபாரங்களில் ஈடுபட வேண்டும். மதவழிபாடுகளில் ஈடுபட வேண்டும் நிம்மதியாக தூங்கவேண்டும் என்பதைத்தான் கேட்கிறோம்.

என்னுடைய இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை சஜித் பிரேமதாச, கோட்டாபய ஆகிய இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

16ஆம் திகதி வாக்குகள் எண்ணப்படும் போது எந்த வேட்பாளர்களும் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறமாட்டார்கள். என்னோடு களமிறங்கியுள்ள எந்த வேட்பாளர்களும் விருப்பு வாக்கு முறையை சொல்லவில்லை.

ஆகையால் இந்த நாட்டின் ஜனாதிபதி யார் என்பதை என்னுடைய ஒட்டகச் சின்னம்தான் தீர்மானிக்கும் என்றார்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை