இனவாத, மதவாத கொள்கைக்கு பௌத்தர்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் இனவாத, மதவாத கொள்கைகளைப் பரப்புபர்களுக்கு பெரும்பான்மை இன பௌத்தர்கள் எவரும் ஒரு போதுமே வாக்களிக்கமாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து அட்டாளைச்சேனை பிரதான வீதியில் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கே.முகம்மட் தலைமையில் நேற்று முன்தினமிரவு (12) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பௌத்த மதத்தை நேசிக்கும் பெரும்பான்மை இனமக்கள் மொட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கமாட்டார்கள். இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களையும் அரவனைத்து ஜனநாயக ரீதியில் வழி நடத்தக் கூடிய சக்தியும் ஆற்றலும் உடையவர் சஜித் பிரேமதாச.

இதன் பிரதிபலனை இந்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்வரும் 17ஆம் திகதி அடைந்து கொள்வார்கள் என்பதில் எந்த ஐயப்பாடுமில்லை. இலங்கையில் வாழும் பல்லின மக்களும் நிம்மதியாகவும், சாந்தி, சமாதானம் மற்றும் சுதந்திரத்துடன் வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவதற்கு இந்நாட்டில் வாழும் பல்லினமக்களும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அன்னச்சின்னத்திற்கு எதிர்வரும் 16ஆம் திகதி நேரகாலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டும்.

கடந்த மஹிந்தவின் ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்களைச் செய்து சொத்துக்களையும்,உடமைகளையும் அழித்த பேரினவாதிகள் அத்தனைபேரும் இப்போது இருப்பது மொட்டு வேட்பாளர் கோட்டாவுடன்தான் உள்ளனர்.

இந்த பேரின வாதிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் வைத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிடும் கோட்டாபய வெற்றி பெற்றால் முஸ்லிம்களுக்கு என்ன நடக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள்.

இவ்விடயங்களை நாம் எளிதில் மறந்திட முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை