சூரிய மண்டலத்தை விட்டு வொயேஜர் 2 வெளியேற்றம்

எமது சூரிய குடும்பத்தின் தொலைதூரத்தை எட்டியிருக்கும் நாசாவின் வொயேஜர் 2 விண்கலம் சூரிய ஆற்றல் முடிவுறும் அண்டை பரிதி மண்டலப் பகுதியை எட்டியிருக்கும் நிலையில் தொலைதூர பகுதி பற்றிய புதிய புரிதல்களை ஏற்படுத்தி இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வொயேஜர் 1 விண்கலத்திற்கு பின் மனிதன் உருவாக்கிய இரண்டாவது பொருளாக வொயேஜர் 2 எமது சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேறியதாக அமெரிக்க விண்வெளி நிறுவனம் முன்னதாக குறிப்பிட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு நவம்பர் 5 அன்று சூரியனில் இருந்து 11 பில்லியன் மைல்களுக்கு அப்பால் பயணித்த அந்த விண்கலம் அண்டை பரிதி மண்டலப் பகுதிக்குள் நுழைந்தது.

வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 இரு விண்கலங்களும் ஐந்து ஆண்டு திட்டமாக 1977 ஆம் ஆண்டே விண்ணில் ஏவப்பட்டது. 2012 ஆம் ஆண்டு மாறுபட்ட இடத்தில் இருந்து வொயேஜர் 1 சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறியது.

இந்த இரு விண்கலங்களும் தற்போது பால்வெளி மண்டல நட்சத்திரங்களுக்கு இடைப்பட்ட மிகப் பரந்த பகுதியில் உள்ளன.

சூரிய மண்டலத்தின் எல்லையில் இருந்து பாதுகாப்பு பகுதியான ஹீலியோபாஸ் என்று அழைக்கப்படும் கோள விளிம்பை கடக்கும்போது ஏற்படும் பிளாஸ்மா அடர்த்தி மற்றும் காந்த துகள்களின் வித்தியாசங்களை வொயேஜர் 2 இன் விஞ்ஞான கருவிகள் அவதானித்திருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கோள விளிம்புப் பகுதியானது எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மெல்லியது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சூரிய மண்டலத்தில் திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு பின் நான்காவது கட்டமாகவே பிளாஸ்மா உள்ளது குறிப்பிடத்தக்கது.

வொயேஜர் 2 இல் உள்ள சூரியப் பிழம்பு உணர் கருவியே விண்கலம் சூரிய விளிம்புக் கோளத்தைத் தாண்டி உள்ளது என்று உறுதியாகத் தெரிவித்தது.

சூரியனில் இருந்து பூமியை விடவும் 120 மடங்கு தொலைவில் இருக்கும் வொயேஜர் 2 விண்கலம் அனுப்பும் தகவல்கள் ஒளிவேகத்தில் வந்தபோதும் அது பூமியை அடைவதற்கு 16.5 மணி நேரம் எடுக்கின்றது.

இது பற்றிய ஆறு வெவ்வேறு ஆய்வு முடிவுகள் ‘ஜெர்னல் நேச்சர் ஆஸ்ட்ரோனமி’ சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை