ஐ.எஸ் தலைவர் பக்தாதியின் மூத்த சகோதரி பிடிபட்டார்

உயிரிழந்த இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதியின் மூத்த சகோதரி பிடிபட்டதாக துருக்கி அறிவித்துள்ளது. வடமேற்கு சிரியாவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின்போது அவர் சிக்கியதாக துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அலெப்போ மாகாணத்தின் அஸாஸ் நகருக்கு அருகில் கொள்கலன் ஒன்றில் வசித்து வந்த 65 வயதான ரம்சியா அவாத், அவரது கணவர், மருமகள் மற்றும் ஐந்து சிறுவர்கள் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக துருக்கி அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை முக்கிய உளவுத் தகவல்களை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அந்த அதிகாரி பிடிபட்ட பெரியவர்கள் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“இது ஒரு உளவுத் தகவல் சுரங்கம். ஐ.எஸ் பற்றி அவருக்கு தெரிந்தது அந்த குழு தொடர்பில் எமது புரிதலை அதிகரிக்கவும் மேலும் பல கெட்டவர்களை பிடிக்கவும் உதவும்” என்று பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் அந்தத் துருக்கி அதிகாரி ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் குடும்பங்கள் தப்பிச் செல்லும் வழியில் உள்ள பிரதேசத்திலேயே ரம்சியா அவாத் பிடிபட்டுள்ளார். எனினும் இந்த சகோதரி பற்றி பெரிதும் அறியப்படாதிருப்பதோடு அவர் எவ்வாறு அடையாளம் காணப்பட்டார் என்பது பற்றி சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் பிற்பகுதியில் அமெரிக்க அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலின்போது அல் பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்தக் கைதி நடவடிக்கை தீவிரவாதத்திற்கு எதிரான எமது வெற்றிகரமான நடவடிக்கைக்கு மற்றொரு உதாரணமாக இருப்பதாக துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்துவானின் தொலைத்தொடர்புகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

பக்தாதிக்கு பல சகோதர சகோதரிகள் இருப்பதாக நம்பப்படுவதோடு அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது.

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை