இங்கிலாந்தை மீண்டும் பந்தாடியது நியூஸிலாந்து

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ரி-20 போட்டியில், நியூஸிலாந்து அணி, 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், நியூஸிலாந்து அணி 2-–1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நெல்சன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, ஆறுதல் அளிக்கும் ஆரம்பத்தை பெற்றுக்கொண்டது.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்டிலும், கொலின் முன்ரோவும் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 40 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக் கொண்டனர்.

இதன்போது, மார்டின் கப்டில் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்த ஓவரின் மற்றொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோவும் 3 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த டிம் செய்பர்ட் மற்றும் கொலின் டி கிராண்ட்ஹோமி 27 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர, டிம் செய்பர்ட் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களம்புகுந்த அனுபவ வீரர் ரோஸ் டெய்லர், கொலின் டி கிராண்ட்ஹோமியுடன் இணைந்து 66 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தார்.

இதன்போது, கொலின் டி கிராண்ட்ஹோமி 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ரோஸ் டெய்லரும் 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு அடுத்தடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் 20 ஓட்டங்களுடனும், மிட்செல் சான்ட்னர் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, டிம் சவுத்தீ 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இதன்படி நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில், டொம் கர்ரன் 2 விக்கெட்டுகளையும், சேம் கர்ரன், சக்யுப் மொஹமத், பெட்ரிக் பிரவுண் மற்றும் மெத்தியூ பார்க்கிஸன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 181 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, சிறப்பான ஆரம்பத்தை பெற்றுக்கொண்டாலும், மத்திய வரிசையில் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர்.

அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான டொம் பென்டொன் மற்றும் டாவிட் மாலன் ஆகியோர் இணைந்து ஆரம்ப விக்கெட்டுக்காக 27 ஓட்டங்களை பகிர்ந்துக் கொண்டனர்.

இதன்போது டொம் பென்டொன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ் களத்தில் நங்கூரமிட்டார்.

டாவிட் மாலன் மற்றும் ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் இணைந்து 63 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளை, துரதிஷ்டவசமாக டாவிட் மாலன் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஜேம்ஸ் வின்ஸ் ஒருபுறம் ஆறுதல் அளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடினாலும், அடுத்து களமிறங்கிய எந்த வீரர்களும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கவில்லை.

அணித்தலைவர் ஓய்ன் மோர்கன் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த ஜேம்ஸ் வின்ஸ் 49 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஓய்வறை திரும்பினார்.

இதன்பிறகு களமிறங்கிய சேம் பிளிங்ஸ் 1 ஓட்டத்துடனும், சேம் கர்ரன் 2 ஓட்டங்களுடனும், லீவிஸ் கிரிகோரி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், ஆட்டமிழந்தனர்.

டொம் கர்ரன் ஆட்டமிழக்காது 14 ஓட்டங்களுடனும், சக்யுப் மொஹமத் ஆட்டமிழக்காது 3ஓட்டங்களுடனும் களத்தில் இருக்க, இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் நியூஸிலாந்து அணி 14 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதில் நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், லொக்கி பெர்குசன் மற்றும் பிளாயர் டிக்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், இஷ் சோதி மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 35 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 55 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட கொலின் டி கிராண்ட்ஹோமி தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான நான்காவது ரி-20 போட்டி, எதிர்வரும் 8ஆம் திகதி நெப்பியர் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Wed, 11/06/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக