நியூசிலாந்து - இங்கிலாந்து 2ஆவது டெஸ்ட் ஹமில்டனில்

நியூசிலாந்து- - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஹமில்டனில் ஆரம்பிக்கிறது.

முதலாவது போட்டியில் இனிங்ஸால் தோல்வியடைந்த இங்கிலாந்து தொடரைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இப்போட்டியை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகின்றது.

அந்தவகையில், ஹமில்டன் ஆடுகளமானது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் எனக் கருதப்படுகையில், கிறிஸ் வோக்ஸ் அணிக்குள் வரக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டாலும் முதலாவது போட்டியில் விளையாடிய அதே இங்கிலாந்து அணியே இப்போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்கு அணித்தலைவர் ஜோ றூட்டிலிருந்து துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் மேம்பட்ட பெறுபேற்றை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.

அண்மைய காலங்களில் இங்கிலாந்தின் துடுப்பாட்டவீரர்கள் அரைச்சதங்களைப் பெறுகின்றபோதும் அவற்றை சதங்களாக மாற்றுவது அரிதாக உள்ளது. எனவே அதைத் திருத்தி பெரிய ஓட்ட எண்ணிக்கைகளைப் பெறும்போதே எதிரணிக்கு அழுத்தத்தை வழங்க முடியும்.

காயம் காரணமாக கொலின் டி கிரான்ட்ஹொம், ட்ரெண்ட் போல்டை நியூசிலாந்து இழந்துள்ள நிலையில் அது அவ்வணிக்கு பின்னடைவாக இருக்கின்றபோதும் இவர்களை அணியில் டரைல் மிற்செல், மற் ஹென்றி ஆகியோர் பிரதியிட்டு அவர்கள் ஆற்றிய அதே பணியை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அணியில் லொக்கி பெர்கியூசன் காணப்படுகின்றபோதும், ஹமில்டன் ஆடுகளமானது ஸ்விங்குக்கு ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே, மற் ஹென்றி அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வளவாக அழுத்தத்தைக் கொண்டிருக்கா விட்டாலும் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜீட் றாவல், அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கு முன்பாக ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை