மாலியில் ஹெலி விபத்து: 13 பிரான்ஸ் படையினர் பலி

மாலியில் ஜிஹாதிக்களுக்கு எதிரான படை நடவடிக்கை ஒன்றின்போது நடுவானில் இரு ஹெலிகொப்டர்கள் மோதிய விபத்தில் பதின்மூன்று பிரான்ஸ் படையினர் கொல்லப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை மாலை இந்த விபத்து நேர்ந்ததாக அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. விபத்துக் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இராணுவ போக்குவரத்து ஹெலியுடன் மற்றொரு ஹெலி மோதி இருப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

1983 ஆம் ஆண்டு பெய்ரூட்டில் டக்கார் கட்டடத்தின் மீது இடம்பெற்ற தாக்குதலில் 58 துணைப்படையினர் கொல்லப்பட்டதற்கு பின்னர் அதிக பிரான்ஸ் துருப்புகள் கொல்லப்பட்ட சம்பவமாக இது உள்ளது.

இஸ்லாமிய போராளிகள் நாட்டின் வடக்கு பகுதியை கைப்பற்றியதை அடுத்து 2012 தொடக்கம் மாலியில் வன்முறை நீடித்து வருகிறது. பிரான்ஸ் இராணுவத்தின் உதவியோடு மாலி இராணுவம் இழந்த நிலங்களை மீட்டது.

அந்நாட்டில் தொடர்ந்து பாதுகாப்பில்லாத சூழல் நீடித்து வருவதோடு இந்த வன்முறைகள் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கும் பரவி வருகிறது.

தனது வாகனத்திற்கு அருகில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒரு மாதத்திற்கு முன் மற்றொரு பிரான்ஸ் வீரர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு மாலிக்கு துருப்புகளை அனுப்பியது தொடக்கம் இதுவரை 38 பிரான்ஸ் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை