லெபனான் ஆர்ப்பாட்டக்காரர்கள், ஹிஸ்புல்லாஹ் இடையே மோதல்

லெபனானில் அரசியல் முறைக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பிரதான சியா அமைப்பான ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. சில பகுதிகளில் துப்பாக்கிச் சூடுகளும் இடம்பெற்றிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்த இரு தரப்புக்கும் இடையிலான மோதல்களில் கடந்த திங்கட்கிழமை தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் பாதுகாப்பு படையினர் தலையிட்டனர்.

அரசுக்கு எதிரான அமைதியான ஆர்ப்பாட்டங்கள் தற்போது வன்முறையாக மாறிவருகிறது.

தலைநகர் பெய்ரூட்டின் கோலா பாலத்தில் கடும் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெறும் காட்சிகளை லெபனான் தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது. எனினும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடன் வெளியாகவில்லை.

தெற்கு நகரான டைரேவில் ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் முகாம்களை உடைத்து அவைகளுக்கு தீவைத்துள்ளனர். இதில் தலையிட்ட படையினர் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

லெபனானின் பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் இனரீதியான ஆட்சியில் நிலவும் ஊழல்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டே லெபனானில் கடந்த ஐந்து வாரங்களுக்கு மேலாக அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் லெபனான் பிரதமர் சாத் ஹரிரி கடந்த ஒக்டோபர் 29 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அவரது கூட்டணி அரசில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பும் அங்கம் வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை