இ.தொ.காங்கிரஸ் சஜித்தை ஆதரித்தால் வரவேற்போம்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்குமேயானால் அதனை நாங்கள் வரவேற்கின்றோம். எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையென அமைச்சர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக பொகவந்தலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (11) பார்வையிட்ட பின்பு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்குமேயானால் அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஐக்கிய தேசிய கட்சியை வெற்றிப்பெற செய்ய யார் வந்து இணைந்தாலும் தவறில்லை. ஆகையால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கினால் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. இரண்டு தேசிய கட்சிகள் இணைந்து அரசாங்கம் அமைப்பது இலங்கைக்கு பொருத்தமானதல்ல.

இதன் காரணமாக ஒரே கட்சியில் ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவு செய்தால் அந்த ஆட்சி மக்களுக்கு நன்மை பயக்கும். அதனை உணர்ந்து மக்கள் அனைவரும் ஜனாதிபதி தேர்தலிலும் எதிர்வரும் பொது தேர்தலிலும் வாக்களிக்க வேண்டும். ஆரம்பத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் ஒற்றுமையாகவும் ஒத்த கருத்துடனும் ஒரே இலக்கை நோக்கி பயணித்தார்கள். அதன் மூலம் பல வெற்றிகள் கிடைத்தன. பின்பு இருவருக்குமிடையில் எற்பட்ட கருத்து முரண்பாடு அதன் மூலம் அமைச்சர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு ஒரே அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் ஒருவரை ஒருவர் விமர்சிக்க அரம்பித்ததன் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் தனது இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் போய்விட்டது.

இதன் மூலம் நாங்கள் ஒரு சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டுயிருக்கின்றோம். இந்த தவறை எதிர்காலத்தில் நாம் செய்ய முடியாது.

ஹற்றன் சுழற்சி நிருபர்

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை