விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய 7 பேர் மலேஷிய பொலிஸாரால் கைது

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு வழங்கியமை, நிதி சேகரித்தமை, ஊக்குவித்தமை, ஆட்சேர்த்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்காக மலேசியாவின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழுபேரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூர், (Selangor, Negri Sembilan, Perak, Kedah and Melaka) செலங்கர், நெக்ரி செம்பிலன், பெரக், கடா மற்றும் மலாக்கா ஆகிய பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதிக்குள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போதே மேற்படி ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் விசேட பயங்கரவாத தடுப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் Datuk Ayob Khan Mydin Pitchay அந்நாட்டு செய்திச் சேவையொன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார். மேற்படி ஏழு சந்தேக நபர்களும் பயங்கரவாதத்துக்கு உதவி வருவதாக தமது பிரிவுக்கு கடந்த நவம்பரில் கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்தே இத்தேடுதல் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு ஆதரவு வழங்கிய குற்றச்சாட்டுக்காக (Melaka, Negri Sembilan )

மலாக்கா மற்றும் நெக்ரி செம்பிலன் மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். "மேற்படி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் மலாக்காவில் கடந்த நவம்பர் 28 ஆம் திகதி நடைபெற்ற விடுதலைப்புலிகள் தினத்தில் கலந்து கொண்டதுடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரையாற்றியுமுள்ளனர். அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்துள்ளனர்," என்றும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டுள்ள மூன்றாவது சந்தேக நபர் 28 வயதான வர்த்தகரென்றும் அவரே வருடாந்தம் நவம்பரில் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் விடுதலைப்புலிகள் தினத்தின் ஏற்பாட்டாளர் என தெரியவந்திருப்பதாகவும் அயுப் கூறினார்.

மேலும் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 04 ஆம் திகதியன்று கோலாலம்புரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை காயப்படுத்திய சம்பவத்துடன் இந் நபர் தொடர்புபட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்நபரிடமிருந்து எல்.ரீ.ரீ.ஈ யுடன் தொடர்புபட்ட பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவரிடமிருந்து 10 ஆயிரம் ரிங்கிட் தண்டப்பணமாக அறவிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டிருக்கும் நான்காவது சந்தேக நபர் கோலாலம்பூரில் காப்புறுதி முகவராக பணியாற்றி வரும் 38 வயதுடையவர். இந்நபரே 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உயர்ஸ்தானிகரின் தாக்குதல் சம்பவத்தை திட்டமிட்டிருக்க வேண்டுமென சந்தேகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"சுங்கை சிப்புட் (Sungai Siput). எனும் இடத்தைச் சேர்ந்த 37 வயதான டெக்ஸி சாரதியே கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்தாவது சந்தேகநபர். அவருடமிருந்தும் எல்.ரீ.ரீக்கு சொந்தமான பல ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்நபரும் 2016 ஆம் ஆண்டு விமானநிலையத்தில் வைத்து உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டவர். அவரிடமிருந்தும் 10 ஆயிரம் ரிங்கிட் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது," என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவர்களுடன் 27 வயதான தொழில்நுட்பவியலாளரும் 57 வயதான உணவு தயாரிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பவியலாளரிடமிருந்து எல்.ரீ.ரீ.ஈ அமைப்புடன் தொடர்புபட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் உணவு தயாரிப்பாளர் சமூக வலைத்தளங்களுக்கூடாக எல்.ரீ.ரி.ஈ அமைப்புக்கு ஆதரவு வழங்கி வந்திருப்பதாகவும் அயுப் தெரிவித்தார். எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு மட்டுமன்றி ஏனைய பல அமைப்புக்களுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் விளைவாகவே மேற்படி ஏழுபேரும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

"2001 தொடக்கம் 2012 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 284 ஜெம்மா இஸ்லாமியா உறுப்பினர்களையும் 2013 தொடக்கம் 512 ஐ.எஸ் உறுப்பினர்களையும் 2009 தொடக்கம் 25 எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களையும் கைதுசெய்துள்ளோம். அடிக்கடி பயங்கரவாத அமைப்புக்கள் தொடர்பில் தேடுதல் வேட்டை நடத்துவோம். அதன் அடிப்படையிலேயே நேற்று எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் ஆதரவாளர்களை கைது செய்தோம். சட்டத்துக்கு எதிராக செயற்படும் எவரையும் நாம் கைதுசெய்வோம். நாட்டில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்குள்ள ஆதரவை முறியடிப்பதற்காகவே நாம் இச்செயற்பாட்டை முன்னெடுத்தோம். இதுபோன்ற அமைப்புக்கள் வளர்ச்சியடைவதற்கு முன்னரே தடை செய்யப்பட வேண்டும். மலேசியாவில் மட்டுமன்றி வேறு நாடுகளிலும் எல்.ரீ.ரீ.ஈ அமைப்பை மீள உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாம் கேள்வியுற்றோம். எல்.ரீ.ரீ.ஈ க்கு ஆதரவு வழங்கியமைக்காக சில நாட்களுக்கு முன்னர் நால்வர் ஐரோப்பாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்," என்றும் அவர் விளக்கமளித்தார்.

இக்கைதை இனவாத அடிப்படையில் பார்ப்பது தவறு என சுட்டிக்காட்டிய அயுப், அப்படியானால் ஏன் இதற்கு முன்னர் இடம்பெற்ற கைதுகள் தொடர்பில் அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பவி்ல்லையென்றும் அவர் கூறினார்.

 

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை