சமையல் எரிவாயு தட்டுப்பாடில்லை

வதந்திகளை நம்பவேண்டாம் என்கிறது 'லிற்றோ' நிறுவனம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சமையல் எரிவாயுவின் நுகர்வு வீதம் வழமையைவிட அதிகரித்துள்ளதே தவிர, எரிவாயுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லையென 'லிற்றோ' சமையல் எரிவாயு விநியோகஸ்தர்களின் வர்த்தக திட்டமிடல் மற்றும் வாடிக்கையாளர் சேவை முகாமையாளர் வி. கேதீஸ்வரன் தெரிவித்தார்.  

சமையல் எரிவாயு கொள்கலன்கள் தற்போது நாடு முழுவதும் சீராக விநியோகிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய அவர், இதுவரை 76சதவீதமாக இருந்த 'லிற்றோ' சமையல் எரிவாயுவின் கேள்வி கடந்த இரண்டு மூன்று தினங்களுக்குள் 100சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.  

மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் சமையல் எரிவாயுவுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் பல கடைகளில் சமையல் எரிவாயு பதுக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்தன. இது தொடர்பாக தினகரன் 'லிற்றோ' விநியோகஸ்தர்களின் முகாமையாளரான வி.கேதீஸ்வரனை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு விளக்கமளித்தார்.  

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுமென கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே வெளிவந்த செய்தியினால் பலர் விலை குறைவடையும் வரை காத்திருந்து நேற்று முதலே அவற்றை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் பண்டிகைக்காலம் என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை பலர் தமது வீடுகளுக்காக வாங்க ஆரம்பித்துள்ளமையும் இதன் கேள்வி திடீரென அதிகரித்துள்ளமைக்குரிய பிரதான காரணமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

"விலை குறைவடைந்துள்ள நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்க வேண்டிய தேவை எந்தவொரு வியாபாரிக்கும் இல்லை. நாடு முழுவதும் நாம் சீரான விநியோகத்தை முன்னெடுத்து வருகின்றோம். தீபாவளியை முன்னிட்டு கொழும்பிலிருந்து மலையகங்களுக்கு சென்றவர்களும் நகர்புறங்களிலுள்ள கடைகளிலேயே கொள்கலன்களை வாங்கி வருவதும் அதற்கான கேள்வியை இரட்டிப்பாக்கியுள்ளது.

எனினும் வழமைபோல் சீரான விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை," என்றும் அவர் தெரிவித்தார்.   மேலும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைபோல் சமையல் எரிவாயுவை நேரடியாக விநியோகிக்க முடியாதென்றும் அதற்கு குறிப்பிட்ட கால இடைவெளி அவசியமென்றும் அவர் விளக்கமளித்தார்.  

லக்ஷ்மி பரசுராமன்  

Sat, 10/26/2019 - 09:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை