தமிழர்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும்

சிவாஜிலிங்கம்

தமிழ் வேட்பாளருக்கு வாக்களித்தால் சர்வதேசம் எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த வீரன் யார் கோத்தாவா? சஜித்தா? என்ற போட்டி இடம்பெறுகின்றது இந்த நிலையில் கோட்டபாய ராஜபஷவுக்கு இப்பொழுது தமிழ் மக்களின் வாக்கு தேவைப்படுகின்றது. எனவே தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடியில் நேற்றுமுன்தினம் (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் கடந்த ஏழு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த அரசியல்தீர்வு கிடைக்காமல் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்ளோம். எனவே எங்களுக்கு அவரையோ இவரையோ வெல்ல வைக்கவேண்டும், தோற்க வைக்க வேண்டு மென்பதில்லை. எங்களைப் பொறுத்தளவில் நாங்கள் ஈழத்தமிழர்கள். இன்று எங்களுடைய மக்கள் நொந்து போயிருக்கின்றார்கள். வடக்கு, கிழக்குத்தேசம் மிகப்பெரிய அழிவைச் சந்தித்திருக்கின்றது.

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வில்லை. 89 ஆயிரம் விதவைகள் இருக்கிறார்கள். இவ்வாறான பிரச்சினைகளுக்கு எங்களுடைய தேசத்தை கட்டியெழுப்பவேண்டுமாக இருந்தால் எங்களை நாங்களே ஆளுகின்ற நிர்வாகம் தேவை. எங்களுடைய மக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப்பெரிய ஆதரவை தந்து கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு ,கிழக்கு மாகாணங்களிலே படையினரின் கட்டுப்பாட்டில் தமிழர்களுடைய காணிகள் பல படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு இப்பொழுதுதான் தமிழ் மக்களின் வாக்கு தேவைப்படுகின்றது. இப்பொழுது தென்னிலங்கையில் கோத்தபாய மற்றும் சஜித் ஆகிய இவருக்குமிடையே நடைபெறும் போட்டி யார் சிங்கள பௌத்த வீரன் ? உங்கள் போட்டிக்காக நாங்கள் வாக்களிக்கத் தேவையில்லை.

காணாமல் போனோருடைய பிரச்சினை, அரசியல் கைதிகளுடைய பிரச்சினை, காணிகள் விடுவிப்பு போன்ற விடயத்தில் ஏன் இலங்கையின் இன்றைய அரசியலமைப்பில் 19 திருத்தங்களை போற்றிப் பாதுகாப்போம் என்று சொல்லுகின்றீர்களே 13ஆவது திருத்தத்திலிருக்கக்கூடிய காணி பொலிஸ் அதிகாரத்தை நீங்கள் விடுவிக்கத் தயாரா? ஏற்றுக் கொள்ளத்தயாரா?

நான் வந்தால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவேன். இனிமேல் நடக்கின்ற பேச்சுவார்த்தைகளில் ஒற்றையாட்சியை பௌத்தத்திற்கு முதலிடம் என்ற நிபந்தனையில்லாமல் பேசுவேன் என்று யாராவது சொல்லட்டும். நான் வாபஸ் பெறுகின்றேன் என்றார்.

இச்செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளரின் இணைப்புச் செயலாளர் திருமதி அனந்தி சசிதரன். அடக்குமுறைக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் தம்பிராசா அகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை