கிழக்கு மக்களுக்கான சிறந்த அரசியலை ஏற்படுத்தி கொடுப்போம்

கிழக்குத் தமிழர் ஒன்றியத் தலைவர்

கிழக்கு மக்களுக்காக சிறந்ததொரு அரசியலை உருவாக்கிக் கொடுப்போம் என கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவர் த.சிவநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஒன்றியம் அரசியலில் ஈடுபடாது அரசியல்வாதிகளையும் மக்களுக்கான அரசியலையும் ஏற்படுத்திக் கொடுக்கின்ற பொறுப்பு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய புத்திஜீவிகளுக்கு இருக்கிறது. படித்தவர்கள்தான் தங்கள் சமூகத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும், அவர்கள் சிந்திக்காதுவிட்டால் அரசியலினால் சமூகம் மிக மோசமான பின்னடைவு நிலைக்கு தள்ளப்படும்.

ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தவரைக்கும், கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கு நன்மை ஏற்படக்கூடிய வகையில் எந்த வேட்பாளரின் செயற்பாடுகள் காணப்படுகின்றது மாறாக வெற்றியடைந்தால் கிழக்குத் தமிழரின் பால் நன்மை செய்வேன் என்று உறுதிமொழியை வழங்குவதன் மேல் அந்த வேட்பாளருக்கு தமிழ்மக்கள் வாக்களிக்க முடியும்.

ஆனால் நிறைவேறாத திட்ட வரைபுகளையோ தீர்வுகளையோ நாங்கள் முன்வைத்து காலத்தை வீணடித்து மக்களை ஏமாற்றவும் விரும்பவில்லை.

தமிழ்மக்களின் நீண்ட கால அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு இன்றைக்கோ நாளைக்கோ பல வருடம் கழித்தோ தீர்வு கிடைக்கலாம். ஆனால் அதை மாத்திரம் நம்பியிருந்து இன்னும் பின்தள்ளி மக்களை பட்டினியில் போடுவதற்கு விரும்பவில்லை. உடனடியாக செய்து முடிக்கப்பட வேண்டிய பல பிரச்சினைகளுக்கு அதாவது, இதுவரையில் இலங்கையிலே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்துமே கிழித்து எறியப்பட்டு சாம்பலாக செயலற்றுப்போன ஒப்பந்தங்களாகவே உள்ளன.

எழுத்திலுள்ள ஒப்பந்தங்களுக்கு கடமைக்காக கையெழுத்து வைப்பதனால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஆகவே தமிழ் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்று கடவுளை முன்னிறுத்தி பூரண இதய சுத்தியுடன் யார் முன்வருகிறார்களோ அவர்களுக்கே கிழக்கு மக்கள் வாக்களிப்பவர்களாக இருக்க வேண்டும்.

வெல்லப்போகும் வேட்பாளரை இனங்கண்டு உரியவருக்கு வாக்களிப்பதுதான் தமிழ்மக்களின் புத்திசாலித்தனமாக இருக்கும்.

ஐந்து கட்சிகளினால் முன் வைக்கப்பட்ட 13 அம்சக் கோரிக்கைகளுள் ஒன்றுகூட ஜனாதிபதியாக வருபவரால் நிறைவேற்றப்படக் கூடியவையல்ல.

ஜனாதிபதிக்குரிய அதிகாரத்தை கருத்திற்கொண்டு மாத்திரம் இவற்றை செய்ய முடியாது. இவற்றுக்கு பாராளுமன்ற ஒத்துழைப்பு, தென்னிலங்கை சிங்கள மக்கள் ஒத்துழைப்பு என்பவை வேண்டப்படுகின்றன என்றார்.

மண்டூர் குறூப் நிருபர்

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை