ஒலுவில் கடலரிப்பை பார்வையிட இராஜாங்க அமைச்சர் விஜயம்

ஒலுவில் கடற்கரையோரப் பகுதியில் ஏற்பட்டு வரும் கடலரிப்பு தற்போது மேலும் தீவிரமடைந்து வருவதனால் கரையோர மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதுவிடயமாக சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் நேற்று முன்தினம் (20)ஒலுவில் பிரதேசத்திற்கு விஜயம் செய்து கடலரிப்பினைப் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.அமானுல்லா, பிரதேச சபையின் உறுப்பினர் எம்.அமீன் உட்பட பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மக்களின் வாழ்விடத்திற்கான நிலத்தையும் கடல் கபளீகரம் செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக ஒலுவில் கரையோரப் பகுதியில் இடம்பெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் துறைமுகத்தை அண்மித்த பகுதி, பாரிய இயற்கை அழிவினை எதிர்கொண்டுள்ளது.

ஒலுவில் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு தொடர்பில் பல தடவைகள் இவ்விடத்திற்கு சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சமுகமளித்து பார்வையிட்டு சென்றுள்ளனர்.

தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் கடல் அரிப்பினால் ஒலுவில் துறைமுகத்தினை அண்மித்த சுமார் 800 மீற்றர் கரையோர பகுதி, அழிவடைந்துள்ளது. பல்வேறு தடைகளையும் உடைத்துக்கொண்டு கடலரிப்பு ஏற்படுகின்றது.கடலை அண்மித்து நிர்மாணிக்கப்பட்டிருந்த பல கட்டடங்கள், கிணறுகள் வாடிகள் மற்றும் பல தென்னை மரங்கள் கடலரிப்பு காரணமாக கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. மீன்பிடி வள்ளங்களை நிறுத்துவதற்கான இடம் தற்போது அழிவடைந்துள்ளதாகவும் கடலரிப்பினைத் தடுப்பதற்கு நிரந்தர திட்டமொன்றை ஏற்படுத்தி வழங்குமாறு பொதுமக்கள் இராஜாங்க அமைச்சரிடம் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை