அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித கரிசனையும் காட்டவில்லை

வேட்பாளர் கோட்டாபய

அரசாங்கம் தேசிய பாதுகாப்பு குறித்து எவ்வித கரிசனையும் காட்டவில்லையென ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கந்தளாய் பொதுவிளையாட்டு மைதானத்தில் நேற்றுமுன்தினம் (28) மாலை இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எனக்கு இரண்டு பதவிகள் வழங்கப்பட்டன. அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன். இதேவேளை நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக என்னை நியமித்தார்கள் அதேபோன்று கொழும்பை ஆசியாவின் துரித மாற்றம் மிக்க நகரமாக மாற்றி அமைத்தேன்.

இதேபோல் நீங்கள் உங்களுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுங்கள். நான் என்னுடைய பொறுப்புக்களை நிறைவேற்றுவேன் எனவும் அவர் கூறினார்.

நமது நாட்டில் உயர்தரம் படித்தவர்கள் எத்தனை பேர் இருக்கின்றார்கள், அவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நாங்கள் காத்திருக்கின்றோம்.

அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அனைத்து துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம்.

நாங்கள் எமது நாட்டை பாதுகாக்க வேண்டும். விவசாய துறையை பாதுகாக்க வேண்டும். விவசாயிகள் முன்னேற வேண்டும் என்பதை நாங்கள் விரும்புகின்றோம். இதனால்தான் நாங்கள் ஒரு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

இவ்விடயங்களை செய்வதற்கு நீங்கள் எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, அத்துரலியே ரதன தேரர் மற்றும் ஜீ. எல். பீரிஸ், சுசந்த புஞ்சி நிலமே, கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

(ரொட்டவெவ குறூப், கந்தளாய் தினகரன் நிருபர்கள்)

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை