சஜித்தின் வெற்றியை எவரும் தடுக்க முடியாது

வடக்கு, கிழக்கு தமிழர்களின் வாக்குகள் உறுதியாகியுள்ளதால்

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களிடமிருந்து 25 இலட்சம் வாக்குகள் சஜித் பிரேமதாஸவுக்கு உறுதியாகியுள்ளதால் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித்பிரேமதாஸவின் வெற்றியை எந்தச்சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாதென இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரன் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாசவின் பிரதான தேர்தல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற் கண்டவாறு கூறினார். விஜயகலா மகேஸ்வரன் இங்கு மேலும் விளக்கமளிக்கையில்: வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் வாக்கு வங்கி இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும். கடந்த காலத்தை எமது மக்கள் மறந்துவிடவில்லை. இன்று சிலர் நித்திரையிலிருந்து வழித்துக்கொண்டவர்கள் போன்று எமது மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர். இதனைக் கண்டு நாம் ஏமாந்து விடமாட்டோம்.

தெற்கில் வீடமைப்புத் திட்டங்களை சஜித் பிரேமதாச எப்படி முன்னெடுத்தாரோ அதேவிதமாக

வடக்கிலும் கிழக்கிலும் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார்.சஜித் ஒருபோதும் பாரபட்சமாக நடந்து கொண்டதில்லை. தமிழ் மக்கள் மற்றொரு தடவை வீழ்வதற்கு வாய்ப்பளிக்க முடியாது.

இனமத மொழி பேதமின்றி நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால் இந்த ஜனாதிபதி ​ேதர்தலில் நாம் சஜித் பிரேமதாஸவை வெற்றிபெறச் செய்ய வேண்டும். நாட்டை ஐக்கிய தேசிய முன்னணியால் மட்டுமே கட்டியெழுப்ப முடியும். இந்த விடயத்தில் இனம், மதம், மொழி என்ற பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும். தமிழ் பேசும் மக்கள் சிந்தித்து முடிவெடுப்பது அவசியம். நாட்டில் நல்லிணக்கம், நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் எமது வேட்பாளர் சஜித் வெற்றி பெற வேண்டும்.

நல்லாட்சி அரசு தமிழினத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்திருந்தது.

எம். ஏ. எம். நிலாம்

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை