Header Ads

பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் பேச்சு

இலங்கை – மாலைதீவுக்கிடையே

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்குமிடையிலான விசேட சந்திப்பு நேற்று (09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்.

நேற்றுமுன்தினம் (08) மாலைதீவை சென்றடைந்த அமைச்சர் ரவூப் ஹக்கீமை அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் ஏ.பி. தோரதெனிய விமான நிலையத்தில் வரவேற்றார்.

அதன்பின், மாலைதீவு உயர் கல்வி அமைச்சர் கலாநிதி இப்றாஹிம் ஹஸனை சந்தித்து அமைச்சர் ஹக்கீம் கலந்துரையாடினார். இச்சந்திப்பில் பல்கலைக்கழக மானிய ங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வாவும் கலந்துகொண்டார். மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் தகுதியான மாலைதீவு மாணவர்களை இலங்கை பல்கலைக்கழகங்களில் உள்ளீர்ப்பது குறித்தும், எதிர்காலத்தில் உயர் கல்வி துறையில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்றங்கள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

இதனையடுத்து நேற்று (09) மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மட் நசீட்டை அந்நாட்டின் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஹக்கீம் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்துகொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.