தொழிற்சங்க கூட்டமைப்பு, சிவில் அமைப்புகள் சஜித்துக்கு ஆதரவு

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்து புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் 2015ல் ஆரம்பிக்கப்பட்ட நல்லாட்சி வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு சிவில் அமைப்புக்கள், மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன ஒத்துழைப்பு வழங்கவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்னிலையில் நேற்று இதற்கான உறுதிமொழியை இவை அளித்துள்ளன.

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு இணைந்து நேற்று மாலை கொழும்பு புதிய நகர மணடபத்தில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலே இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டது.

இந்த வைபவத்தில் உரையாற்றிய ஐ. தே. மு. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ: நாட்டு மக்கள் பெற்றெடுத்த சுதந்திரத்தை இல்லாதொழிப்பதற்கு எந்தவொரு சக்கதிக்கும் இடமளிக்கப் போவதில்லை. சுதந்திரம் இல்லாத யுகமொன்றுக்கு நாட்டை கொண்டு செல்ல எவருக்கும் இடமளிக்க முடியாது.

கடந்த காலத்தை மறந்து எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க முடியாது. கடந்த காலங்களில் நாம் பெற்ற அனுபவங்களில் கூடுதலானவை கசப்பானவையே. இவ்வாறான கசப்பான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவகையில் நாம் கவனமாகச் செயற்பட வேண்டியுள்ளது. இனியொருபோதும் நாம் சுதந்திரமற்ற யுகமொன்றுக்கு பயணிக்க முடியாது. அவ்வாறான முயற்சிகளுக்கு இடமளிக்கவும் முடியாது.

நாம் பெற்றிருந்த சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தி வளப்படுத்துவதில் ஐ. தே. மு. அன்றும் இன்றும் உறுதியான நிலைப்பாட்டிலுள்ளது. நாம் ஆரம்பித்த புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளை மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்வதே எனது ஒரே இலட்சியமாகும். இதற்காக நாட்டு மக்கள்அனைவரும் என்னோடு கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: கடந்த ஐந்து ஆண்டுகளில் நேர்மையான ஆட்சியொன்றின் மூலம் நாம் மேற்கொண்ட புனரமைப்பு மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அவை இடையில் தடைப்பட்டுவிடக் கூடாது. அதன் பொருட்டு எமது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்ய ஒன்றிணைய வேண்டும்.

 

எம். ஏ. எம். நிலாம்

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை