சுதந்திர கட்சியின் தீர்மானத்தை தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்று கோட்டாபயவையே ஆதரிப்பர்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷக்கு ஆதரவளிக்க

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தை சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்கள் ஏற்றுக்கொண்டு முழுமையான ஆதரவு வழங்குவரென,பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சு.கவின் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் கொழும்பு, மருதானை டார்லி வீதியில் அமைந்துள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சுதந்திரக் கட்சியின் தீர்மானம் நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் போட்டியிட மாட்டேனென எடுத்த தீர்மானத்தின் பின்னர்தான் நாம் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப்பெற்ற பின்னர் சு.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்த அரசாங்கமொன்று அமைக்கப்படும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை மாத்திரமே நாம் நடைமுறைப்படுத்துவோம். இதேவேளை, சிறுபான்மை தமிழ்,முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே சு.கவின் தீர்மானம் அமைந்துள்ளது. அமையவுள்ள அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை