நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட சிவாஜிலிங்கம் முடிவு

பாதுகாப்பு வழங்கினால் காலி, மாத்தறைக்கும் செல்லத் தயார்

நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தயாராகவுள்ளதாகவும்,பாதுகாப்பு வழங்கினால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று (10) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் பேசுகையில்,  கொழும்பு, மலையகம், வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பிரதேசங்களில் எமக்கு கிடைக்கப்பெறும் வசதி வாய்ப்புக்களைப் பெற்றுக்கொண்டே பிரச்சாரங்களில் ஈடுபடவேண்டியுள்ளது.காலி,மாத்தறை மாவட்டங்களில் பிரச்சாரத்துக்குச் செல்ல முடியாது. பாதுகாப்பு வழங்கினால் அங்கும் செல்வேன்.

சாதிக்க முடியாமல் போகலாம், சாதிக்க முயற்சி எடுத்தவர்களாக மக்கள் மத்தியில் செயற்பட்டவனாக உயிரை விட வேண்டும். பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் பிரதிநிதிகளை கைகோர்ப்பதற்கு, நான் போட்டியிடுவது வலுச்சேர்த்துள்ளது.

எந்தக் கட்சிகளுடனும், சர்வதேச விசாரணை மற்றும் போர்க்குற்ற விசாரணைகளுக்கான சமரசம் இல்லை. யாராக இருந்தாலும், போர்க்குற்ற விசாரணைக்கான கோரிக்கையை முன்னெடுப்போம். அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சிவாஜிலிங்கத்திற்கு பித்துப் பிடித்ததுள்ளதாகத் தெரிவித்துள்ளமை பற்றிக் கேட்டதற்குப் பதிலளித்த அவர்,

சிவாஜிலிங்கத்திற்கு பித்துப் பிடித்துள்ளதாகக் கூறும் கஜேந்திரகுமார் தேசியவாதி என்றால், 2010 ஆம் ஆண்டு போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு, அவரின் கட்சியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன், ஆதரவு கோரியமை எதற்காக. தமிழ் தேசியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலா ஆதரவு கோரி உரையாற்றினார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்த பின்னர், சிறையிலுள்ள இராணுவத்தினரை விடுவிப்பதாக கோட்டாபய கூறுகின்றார். ஏன் 26 வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதாக அவர் கூறவில்லை.

அரசியல் கைதிகளை விடுவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், ஏன் சொல்லவில்லை?

இன்றைய சூழ்நிலைகளைப் பார்த்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியின் தமிழ் பிரிவு போன்று செயற்படுகின்றது. தேர்தலுக்கு அண்மித்த காலப்பகுதியில் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களிக்கச் சொல்வார்கள்.ஆகவே எமது மக்களுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார்.

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

Fri, 10/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக