நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இராணுவத்தின் பிரதான கடமை

நாட்டின் தற்போதைய நிலைமை, மற்றும் எதிர்கால சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு முகம் கொடுக்கும் வகையில் இராணுவத்தை நவீன மயப்படுத்தி மேம்படுத்துவதே தனது எதிர்பார்ப்பென, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தின பிரதான நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நேற்றுக் காலை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற மரியாதை அணிவகுப்பின் போது இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இராணுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பதில் பாதுகாப்புச் செயலாளர் அநுராத விஜேகோன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி மேலும் உரையாற்றுகையில் :-

இராணுவம் கடந்த காலங்களை விட பொது மக்களுடன் மிகவும் நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்படுகிறது. இராணுவத்திற்கும் பொது மக்களுக்குமிடையிலான உறவை மேலும் பலப்படுத்துவது மிகவும் பெறுமதியானதாக அமையும்.

70ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்த சந்தர்ப்பத்தில் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கை இராணுவத்தின் முதலாவது தளபதியாக செயற்பட்ட பிரிகேடியர் ரொடெரிக் சின்கிளேயர் உட்பட எனக்கு முன்னர் தலைமைத்துவத்தை வழங்கி அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய 22 தளபதிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தாய் நாட்டின் இறைமை ஒருமைப்பாட்டை பாதுகாக்க சகல சவால்களுக்கும் முகம் கொடுத்த நிலையில் சேவையாற்றிய அனைத்து படைவீரர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.

நான் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட போது தேசிய பாதுகாப்பு, தேசத்தை கட்டியெழுப்புதல், நல்லிணக்கத்திற்கு உதவுதல், இராணுவ வீரர்களின் கல்வித்தரம்,திறமைகளை மேம்படுத்தல், ஓய்வு பெற்றுச் செல்லும் படைவீரர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தல், இராணுவத்தை நவீனமயப்படுத்தல் போன்ற 7 எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டு எனது பணிகளை முன்னெடுக்கத் தொடங்கினேன். அவற்றை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றேன்.

நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இராணுவத்தின் பிரதான கடமையாகும்.

அதனை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்கள், அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க தேவையான பயிற்சிகள் வழங்கப்படும்.

அதேபோன்று நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்டே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதபோன்று 7,210 இராணுவத்தினர் இன்றைய தினம் தரமுயர்த்தப்பட்டுள்ளனர். அதிகமானோருக்கு தரமுயர்வு வழங்கப்பட்டதும் இதுவே முதற் தடவையாகும்.

210 இராணுவ அதிகாரிகளுக்கும் 7,000 இராணுவ வீரர்களுக்குமே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 3 பேர் இரண்டாவது லெப்டினன்ட் தரத்திலிருந்து லெப்டினன்ட் தரத்திற்கும், 17 பேர் லெப்டினன்ட் தரத்திலிருந்து கெப்டன் தரத்திற்கும், 150 பேர் கெப்டன் தரத்திலிருந்து மேஜர் தரத்திற்கும் 40 பேர் மேஜர் தரத்திலிருந்து லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்குமே உயர்த்தப்பட்டுள்ளனர்.

ஸாதிக் ஷிஹான்

 

Fri, 10/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை