வேட்புமனு தாக்கல் செய்வதில்லை என்ற முடிவிலே கட்டுப்பணம் செலுத்தினேன்

ஒலுவில் மத்திய விசேட, புதிய காத்தான்குடி விசேட நிருபர்கள்

வேட்புமனு தாக்கல் செய்வதில்லை என்கிற முடிவுடனேயே கட்டுப்பண செலுத்தினேன் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத் தெரிவித்தார்.

வேட்பு மனு தாக்கல் செய்யாதது குறித்து நேற்று முன்தினம் ஊடக அறிக்ைகயில் ஒன்றின் மூலம் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவ் அறிக்கை வருமாறு:-

நான் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது பற்றிய செய்தி ஊடகங்களில் வெளி வந்திருந்தது. நியமனப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்பது பற்றியும் செய்திகள் வெளியாகின. ஏன் கட்டுப்பணம் செலுத்தினேன்? ஏன் நியமன பத்திரம் தாக்கல் செய்யவில்லை? என்பன பற்றி தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

நான் கட்டுப்பணம் செலுத்திய வேளை வேறெந்த சிறுபான்மை அரசியல்வாதிகளும் பணம் செலுத்தியிருக்கவில்ல. பின்னர் பலர் போட்டியிட முனைந்தனர்.

நான் பணம் கட்டுவதற்கு முன்னரே தமிழ்பேசும் பொது வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தேன்.

தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூடிப் பேசி பொது முடிவொன்றுக்கு வராமல் தமிழ் பேசும் பொது வேட்பாளர் ஒருவர் போட்டியிடுவது சாத்தியமில்லை என்பதை நான் முன்னரே உணர்ந்திருந்தேன்.

2005 ஆம் ஆண்டு வடக்குத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் விட்டமைதான் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக்கியது.

2010 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் அளித்த வாக்கு வீதம் மிகக் குறைவாக இருந்தமையும், முஸ்லிம் மக்கள் மஹிந்தவுக்கு 2005 ஆம் ஆண்டு தேர்தலில் வழங்கிய வாக்குகளை விட 2010 இல் அளித்த வாக்குகளில் கணிசமான அதிகரிப்பு காணப்பட்டமையும் அவரை இரண்டாவது முறையும் ஜனாதிபதியாக்கியது.

2015 இல் நடைபெற்ற தேர்தலில் தமிழ் ,முஸ்லிம் மக்கள் ஏகோபித்து வழங்கிய மில்லியன் கணக்கான வாக்குகள் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கதிரையில் அமர்த்தின.

2005 இல் தமிழர் எடுத்த முடிவு தமிழரின் ஆயுதப் போராட்ட அரசியலை முடித்து வைத்தது.

2010 தேர்தலின் பின்னரான ஐந்து வருட காலத்துள் தமிழ்பேசும் மக்கள் எதனையும் அடையவில்லை. 2015 தேர்தலின் பின்னர் கடந்த சுமார் ஐந்து வருடங்களும் வீணாகிப் போனதை யாவரும் அறிவோம்.

2015 ஆம் ஆண்டைய தேர்தலில் நான் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும் எந்தக் கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவாக கள வேலைகளில் ஈடுபடவோ எனது வாக்கைத்தானும் வழங்கவோ இல்லை என அவரது ஊடக அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை