வாய்ப்பை இழக்கும் சிரேஷ்ட வீரர்கள்

இலங்கை - அவுஸ்திரேலிய தொடர்:

அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இலங்கை 20க்கு 20 அணியில் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவரும், அணியின் முகாமையாளருமான அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் 20க்கு 20 தொடரில் விளையாடி வரும் இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணி, முதல் நிலையான பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை 2-0 என வெற்றிக்கொண்டுள்ளது. அதுமாத்திரமின்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதன்முறையாக 20க்கு 20 தொடர் ஒன்றையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியின் இளம் வீரர்கள் பாகிஸ்தானில் பிரகாசித்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் ஆரம்பிக்கவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான T20i தொடருக்கான குழாத்தில் இந்த இளம் வீரர்கள் இடம்பிடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்தள்ளது. இதற்கான பதிலை தேர்வுக்குழுத் தலைவர் அசந்த டி மெல் அளித்துள்ளார். இதுதொடர்பில் அவர் எமது இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் குறிப்பிட்ட போது,

“அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 20க்கு 20 அணியில் பாரிய மாற்றங்கள் ஏற்படாது. பாகிஸ்தான் தொடரில் விளையாடிய இலங்கை வீரர்களில் இரண்டு அல்லது மூன்று மாற்றங்களே ஏற்படும். அணித் தலைவராக லசித் மாலிங்க செயற்படுவதுடன், அவர் உட்பட இரண்டு அல்லது மூன்று வீரர்கள் மாத்திரமே அணியில் இணைத்துக்கொள்ளப்படுவர்”

பாகிஸ்தானில் விளையாடி வரும் இலங்கை அணியின் இளம் வீரர்கள் தங்களுடைய வாய்ப்பினை தக்கவைக்கும் வகையில் விளையாடியுள்ளனர். இவர்களின் இந்த பிரகாசிப்பு அணிக்கு எத்தகைய பலத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அசந்த டி மெல் தெளிவுப்படுத்தினார்.

“அனுபவமற்ற இளம் வீரர்கள் அனைத்து துறைகளிலும் பிரகாசித்து அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக தனுஷ்க குணதிலக்கவின் துடுப்பாட்டம், பானுக ராஜபக்ஷவின் சிறந்த ஆட்டம் மற்றும் வனிந்து ஹசரங்கவின் சகலதுறை பிரகாசிப்பு என்பன அணிக்கு வலு சேர்த்துள்ளது. இவ்வாறு, இளம் வீரர்கள் செயற்படுவது, அணியில் இருக்கும் மேலதிக வீரர்கள் பலமுடையவர்களாக உள்ளனர் என்பதை நிரூபிக்க முடிகிறது. இதுவொரு சிறந்த விடயமாகும்”

அவுஸ்திரேலியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணம் நெருங்கி வரும் நிலையில், இலங்கை அணியின் ஆயத்தங்கள் தொடர்பாகவும் அசந்த டி மெல் குறிப்பிட்டார்.

“நாம் அடுத்து அவுஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளோம். அதன் பின்னர் ஜனவரி மாதத்தில் இந்திய அணிக்கு எதிரான 20க்கு 20 தொடர் உள்ளது. மொத்தமாக உலகக் கிண்ணத்துக்கு முன்னர் 15 20க்கு 20 போட்டிகள் எமக்கு உள்ளன. குறித்த போட்டிகளை உலகக் கிண்ணத்துக்கான ஆயத்தமாக நாம் எடுத்துக்கொள்வோம்.

அதுமாத்திரமின்றி உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளில் நாம் விளையாட வேண்டும். அதுதான் எமது முதல் இலக்கு. இப்போது போன்று நாம் விளையாடினால் உலகக் கிண்ணத்தில் சிறந்த சவாலை கொடுத்து வெற்றிகளை பெற முடியும் என நம்புகிறேன்” என்றார்.

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை