இலங்கை மகளிர் அணி தொடர் தோல்வி

ஆஸி மகளிர் அணியுடனான கிரிக்கெட் தொடர்

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி மோசமான தொடர் தோல்வியைப் பதிவு செய்துள்ளது. இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்து தொடரை தாரைவார்த்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்டு 20க்கு20 தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.

ஏற்கனவே, 20க்கு 20 தொடரை 3 – 0 என பறிகொடுத்த இலங்கை அணி, ஒருநாள் தொடரை எதிர்கொண்டது. ஒருநாள் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தது.

மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நேற்று பிறிஸ்பேன் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை வீராங்கனைகள், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அதிகபட்சமாக ஆரம்பத்துடுப்பாட்ட வீராங்கனை சாமரி அத்தப்பத்து ஜயாங்கனி 103 ஓட்டங்களைக் குவித்தார். தொடர்ந்து 196 என்ற இலகுவான ஓட்ட இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய மகளிர் அணி, 26.5 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஹீலி ஆட்டமிழக்காது 112 ஓட்டங்களையும், ஹைனெஸ் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த வெற்றி மூலம் இலங்கைக்கு எதிரான தொடரையும் 3 – 0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி கொண்டது.

இந்த ஒருநாள் தொடர் ஐ.சி.சி.யின் மகளிர் சம்பியன்ஷிப்பின் கீழ் இடம்பெற்று வருகின்றது. குறித்த தொடரில் இலங்கை மகளிர் அணி இதுவரை ஒரு வெற்றியை மாத்திரம் பதிவு செய்து புள்ளிகள் பட்டியலில் இறுதி (08) இடத்தைப் பிடித்துள்ளதுடன், அவுஸ்திரேலிய மகளிர் அணி 17 வெற்றிகளுடன் முதலிடத்தில் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை