மக்களின் பிரச்சினையை தீர்க்கக்கூடிய சஜித்திடம் உடன்படிக்கை அவசியமில்லை

அமைச்சர் ரிஷாட்

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்துத்தருவதாக கூறும் சஜித் பிரேமதாசாவிடம் உடன்படிக்கைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (20) நிந்தவூர் பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அதிக பட்ச ஆதரவினை சிறுபான்மை சமூகம் வழங்குகின்ற வேட்பாளராக சஜித் பிரேமதாச இருப்பதை அறிய முடிகின்றது. ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தில் சிறுபான்மைக் கட்சிகளின் கருத்துக்களை அறிந்து செயற்படுமாறு பிரதமருக்கு அறிவித்ததன் பிறகே அமைச்சர் சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதன் பிறகு அவரிடம் கடந்த காலங்களில் எமக்கு ஏற்படுத்தப்பட்ட துன்பங்களையெல்லாம் தெளிவாக விளங்கப்படுத்தியிருந்தோம். நாட்டில் சிறுபான்மைச் சமூகத்திற்கு முன்னால் உள்ள சவால்களை முறியடித்து இரும்பு மனிதன் போல சட்டத்தை யாரும் கையிலெடுக்காத நல்லாட்சியை கொண்டு வருவேன் எனக் கூறினார்.

எல்லா மதத்தின் மரியாதையையும், கௌரவத்தையும், அவர்களின் நிம்மதியான வாழ்வை உறுதிப்படுத்தும் தலைவனாக செயற்படுவேன் என்ற உறுதி மொழியை எம்மிடம் தந்தார்.

ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் முஸ்லிம்களின் நிம்மதி, பாதுகாப்பு என்பன கேள்விக் குறியாக மாறியுள்ள நிலையில், இதனை நாம் மீண்டும் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திடம் பேச்சு நடாத்தி உறுதிப்படுத்திய பின்னரே மக்கள் காங்கிரஸ் அவரை ஆதரிக்க தீர்மானித்தது.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலுக்குப்பிறகு இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவிற்கு ஆதரவு தருகின்ற சக்திகளாகும்.

கடந்த ஆட்சியில் பொது பலசேனாவின் காரியாலய திறப்பு விழாவிற்கு அப்போதைய பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோட்டாபய அங்கு செல்லக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் கூறிய போது, அவர் கோட்டாபயவிடம் அங்கு செல்லாதீர்கள் என்று கூறியும் அதனை மீறி சென்றிருந்தார்.

அழுத்கம, தம்புள்ள, கிரேன்பாஸ், மஹியங்கனை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை. இதில் ஒரு தேரரிற்கு எதிராக 60 முறைப்பாடுகள் செய்த போதும் ஒரு நிமிடம் கூட அவரை கைது செய்து விசாரிக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கத்தில் அவ்வாறு குழப்பம் விளைவித்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தினோம். தற்போது சிங்கள பிரதேசங்களில் கூலிப்படை சஹ்ரானையும், எங்களையும் தொடர்புபடுத்தி பயங்கரவாதிகள் போல் சித்தரித்து இனவாதக்கருத்துக்களால் வாக்குச்சேர்க்கும் அவர்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்க முடியும்.

மக்கள் காங்கிரஸ் தனது குறுகிய கால வளர்ச்சியில் 2005 முதல் 2015 வரையான மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் மூன்று ஜனாதிபதிகளை உருவாக்கிய கட்சியாகும். இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வெற்றி பெறுவார் என்பதில் நாம் திடமாகவுள்ளோம் என்றார்.

(நிந்தவூர் குறூப், ஒலுவில் விசேட, கல்முனை மத்திய தினகரன் நிருபர்கள்)

Tue, 10/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை