புலிகள் கேட்டதையே ஐந்து தமிழ்க் கட்சிகளும் கேட்பதாக இனவாதிகள் கொக்கரிக்கின்றனர்

புலிகள் கேட்டதைத்தான் ஐந்து தமிழ்க் கட்சிகளும் கேட்கிறார்கள் என கோத்தபாயவை ஆதரிக்கும் விமல்வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார தொடக்கம் ஹிஸ்புல்லாஹ் வரை இனவாதத்தை கொக்கரிக்கின்றனர் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி பட்டிருப்பு தொகுதி தலைவருமான பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கை பிரதிநித்துவப்படுத்தும் ஐந்து தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்க தயாரித்த கோரிக்கைகள் புலிகள் கேட்ட கோரிக்கை என இனவாதம் பேசும் சிங்கள பேரினவாதிகள் குற்றம் சுமத்துவதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தந்தை செல்வா முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே ஆயுதம் ஏந்தி போராடினார்களே தவிர விடுதலைப்புலிகள் தானாக எந்த கோரிக்கையும் முன்வைத்து போராடவில்லை.

மாறிமாறி ஆட்சிபீடம் ஏறும் சிங்கள பெரும் தேசிய இனத் தலைவர்கள் தமிழர்களை பகடைக்காய்களாக பாவித்து இனவாதம் பேசி இனப்படுகொலை செய்த வரலாறே இன்றுவரையும் தொடர்கிறது.

விடுதலைப்புலிகள் முள்ளிவாய்காலில் மௌனித்தாலும் அவர்களின் பெயரை உச்சரிக்காமல் அவர்களின் செயலை மீட்டுப்பார்க்காமல் எந்த சிங்கள தலைவர்களும் தமது தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியவில்லை.

புலிகளுடன் தமிழர்களை ஒப்பிட்டுபேசுவது, புலிகளாக தமிழர்களை வர்ணிப்பது எல்லாம் இன்று நேற்றல்ல 1977ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையும் சகல தேர்தல்களிலும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை விதைத்து வெற்றி காணும் ஒரு துர்ப்பாக்கிய சித்தாந்தமே இலங்கையின் சிங்கள தலைவர்களுக்கு என்றும் இரத்தத்துடன் ஊறியுள்ளது.

தற்போது யார் போரை நடத்தியது போரில் வெற்றிபெற்றது என்பதில் நானா நீயா என அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவை ஆதரிக்கும் சரத்பொன்சேகாவுக்கும் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கோட்டாபயவுக்கும் இடையில் யார் ஹீரோ என்ற போட்டி உள்ளது.

வடக்கு, கிழக்கு தமிழர்கள் மத்தியில் பம்மாத்து அரசியல் முகமும்,தென்பகுதியில் இனவாத உண்மை முகமும், காட்டி வாக்குகளை பெறும் பிரசாரம் பிரதான இரண்டு வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் முன்னெடுத்துள்ளனர்.

அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித்பிரமதாசாவின் வாக்குறுதிகளை பிரதமர் ரணிலும், மொட்டு சின்னத்தில் போட்டியிடும் கோட்டாபயவின் வாக்குறுதிகளை எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஷபக்ஷசவும் தமிழ்த் தலைமைகளுக்கு வழங்குவதையே இந்த ஜனாதிபதி தேர்தலில் காணமுடிகிறது.

தமிழ் அரசியல் கட்சிகள் ஐந்தும் இணைந்து முன்வைத்த கோரிக்கை தமிழீழம் இல்லை. தமிழர்கள் சுதந்திரமாக இந்த நாட்டில் சகல உரிமைகளையும் பெற்று வாழ்வதற்காக சுயநிர்ணய உரிமையுள்ள கோரிக்கை மட்டுமே இதைக்கூட விளங்காத அல்லது விளங்கிக்கொண்டு சிங்கள மக்களுக்கு உசுப்பேத்தும் பிரசாரங்களை முன்னெடுக்கும் இனவாத சிங்கள அரசியல் தலைவர்கள் உள்ளவரை இந்த நாடு உருப்படாது என்பதே உண்மை எனவும் தெரிவித்தார்.

 

வெல்லாவெளி தினகரன் நிருபர்-

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை