சஜித்தின் கரங்களை பலப்படுத்தப்போவதாக கிழக்கு சுகாதார தொண்டர்கள் தெரிவிப்பு

ஏழைகளின் துயர் அறிந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கில் எமது அமைப்பு அவரின் வெற்றிக்காக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார தொண்டர் சங்கத்தின் தவிசாளர் ஐ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுய தொழிலாளர் சங்கம், கிழக்கு மாகாண சுகாதார தொண்டர் சங்கம் மற்றும் டி.ஐ.ஜி சமூக சேவை அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஏழை மக்களின் துயர் துடைத்து வரும் சஜித் பிரேமதாச நிச்சயம் எம்மைப் போன்ற ஏழை மக்களின் துயர் துடைக்கக் கூடிய துணிச்சல் மிக்கவர். அதன் காரணமாக அவரை இத்தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் உள்ளது.

இதன் காரணமாகவே எம்மிடம் சுமார் நான்காயிரம் அங்கத்தவர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் தலா பத்து வீடுகளை இலக்காகக் கொண்டு சஜித் பிரேமதாசாவின் வெற்றிக்காக செயற்பட தீர்மானித்துள்ளோம்.

இந்நாட்டின் அதி உயரிய பதவிக்கான ஆசனத்தில் அமரும் வகையில் இளம் வயதினையுடைய ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச களம் இறங்கியிருக்கின்றார். ஏனையர்களைப் போலல்லாது செயற்றிறன் மிக்க ஆளுமையுடைய அவர் சொல்வதை செய்யக்கூடியவர்.

முன்னாள் ஜனாதிபதி அமரர் ஆர்.பிரேமதாச ஏழைகளின் துயர் அறிந்து நாட்டுக்காக சேவையாற்றியவர். அவரது அடியொற்றியே சஜித் பிரேமதாசா தற்காலத்தில் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகின்றார். இந்நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக மூலை முடுக்கெல்லாம் சென்று அடிப்படைத் தேவையாக உள்ள வீடமைப்பு வசதிகளை செய்து வருகின்றார்.

எமது சுகாதாரத் தொண்டர் அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள சுமார் 219 பேர் மிக நீண்ட காலமாக சுகாதாரத் துறையில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. பல ஆட்சியாளர்களிடம் சென்றும் இவர்களுக்கு நிரந்தர நியமனம் பெற்றுக் கொடுக்கும் முயற்சிகள் வீண் போயுள்ளன.

ஏனைய ஆட்சியாளர்கள் போலல்லாது ஏழைகளின் துயர் அறிந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை இத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறுவாராக இருந்தால் நிச்சயம் எமது அமைப்பினரின் துயர் துடைப்பார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே எமது அமைப்பு அவரை வெற்றி பெறச் செய்ய களம் இறங்கியுள்ளது என்றார்.

 

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை