வெற்றி பெறும் வேட்பாளரின் கட்சியே அனைத்து தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தும்

சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம்.ஏ. ஹசன் அலி

ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் சார்ந்த கட்சியே எதிர்வருகின்ற அனைத்து தேர்தல்களிலும் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது என்பதை மறந்துவிடாமல் பொருத்தமான ஜனாதிபதியை நாம் தெரிவு செய்ய வேண்டி உள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் எம். ஏ .ஹசன் அலி தெரிவித்தார்.

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியின் சம்மாந்துறை தேர்தல் காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் (28)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் பேசுகையில்,

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற 35 வேட்பாளர்களில் மனிதாபிமானமாக மக்களோடு சகஜமாக பழகக்கூடியவர் எங்களுடைய சஜித் பிரேமதாசவாகும்.

அவர் அமைச்சராக இருந்து கிராமத்திற்கு கிராமம் சென்று மக்களின் பிரச்சினைகளை காலடியிலேயே பேசி தீர்வு வழங்கிவருபவராக உள்ளார். அவரே இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவதற்கு சகல வகைகளிலும் பொருத்தமானவராக உள்ளார்.

பிரதேச சபை உறுப்பினராக கூட இருந்திராத, மக்களின் அன்றாட பிரச்சினைகளை தெரிந்திராத மொட்டின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்று இந்த நாட்டை எவ்வாறு சிறந்த முறையில் ஆட்சி செய்வார் என்ற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை.

ஒரு காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவைக் கண்டு ஊடகங்கள் பயந்து ஓடியன. ஆனால் இப்போது தலைகீழாக மாறி ஊடகங்களை கண்டு அவர் தடுமாறிக் கொண்டு பதிலளிக்க முடியாமல் ஓடிக் கொண்டிருக்கிறார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பக்கத்தில் இருப்பவர்கள் பதிலளிக்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் இருப்பதை சமீபகாலத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய பிரச்சினையான இனப்பிரச்சினை, சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு தரக்கூடியவரை இந்த நாட்டின் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைக்க வேண்டும்.

அதன் மூலம் நாங்கள் எங்களுக்கான உரிமைகளையும், சலுகைகளையும் உதவிகளையும், தங்கு தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் என மேலும் தெரிவித்தார்.

(அம்பாறை சுழற்சி நிருபர்)

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை