அம்பாறையில் அடைமழை; தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன

இலங்கையின் தென் கிழக்காகக் காணப்படும் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை நிலவி வருவதாக வளிமணிடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் றூபஸ் குளத்தில் 101.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளது. பாணம பிரதேசத்தில் 95.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், லகுகல பகுதியில் 81.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பொத்துவில் பிரதேசத்தில் 75.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், எக்கல் ஓயா பகுதியில் 73.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 66.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடியதாக கிரான் பிரதேசத்தில் 100.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார். இம்மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் 96.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 85.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், நவகிரி பிரதேசத்தில் 66.8 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கட்டுமுறிவு பிரதேசத்தில் 67.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தினைப் பொறுத்த வரையில், இம்மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 53.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி சராசரியாக பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாவட்டத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்கின்றபோது பலத்த காற்றும் வீசி வருகின்றது.

இதேவேளை பலத்த காற்றினால் அக்கரைப்பற்று ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய குருமார் தங்குமிட கூரைகளும் தூக்கிவீசப்பட்டுள்ளது.

ஆலையடிவேம்பில் தாழ் நிலப்பிரதேச வீதிகளும் குடியிருப்புக்களும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தொடர்ந்தும் மழை நீடிக்குமேயானால் தாழ் நிலப்பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்படலாம் என அவதானிக்க முடிந்தது.

அட்டாளைச்சேனை தினகரன், வாச்சிக்குடா விஷேட நிருபர்கள்

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை