மலர்ச்சோலைக்குள் முகிழ்க்கும் எழில் மிகு இள நங்கை

"சிவமலைப்பிள்ளைத்தமிழ்' கவிஞரின் சிருங்காரச் சொல்லமுதம்

அழகான இளம் பெண் ஒருத்தியை வருணிக்கும்போது, அவளுடைய கூந்தலை மேகத்திற்கும் மொழியைக் குயில் அல்லது கிளியின் சொற்களுக்கும் சாயலை மயிலுக்கும் உவமை கூறுவது கவிஞர்களின் வழக்கம்.

புலவர் ஒருவர் ஊரிலுள்ள அழகானதொரு மலர்ச் சோலைக்குள் செல்கிறார். அங்கு காணும் இயற்கைக் காட்சிகள் அவருக்கு ஓர் அழகிய இளம் பெண்ணை நினைவுபடுத்துகின்றன. சோலையின் ஒவ்வோர் அழகையும் மங்கையின் அழகுக்கு உவமை கூறி அருமையான பாடலை இயற்றுகிறார்.

 சோலையின் மீது தவழும் கொண்டல் ஆகிய மேகம் பெண்ணின் கருங்கூந்தல் - மருமலர்க் கூந்தல்; வெண்மையான திங்கள் அவளுடைய அழகிய முகம்; சோலையில் உள்ள கிளி, குயில் ஆகியவையின் இனிய குரலொலி அவளுடைய பண் திகழும் மொழி; சோலையில் வளைந்த கொடியில் மலர்ந்து சிரிக்கும் முல்லை மலர்கள் அவளுடைய முறுவல் செய்யும் பற்கள்; மரங்களிலுள்ள கோங்க மலரின் அரும்புகளும், தென்னங்குரும்பையும் அவளுடைய பணை முலைகளாவன;

 வஞ்சியங்கொம்பு, வல்லிக்கொடி ஆகியன அவளுடைய ஒடியும் மெல்லிடை; நெருக்கமாக வளர்ந்துள்ள கமுகு அவளுடைய கழுத்திற்கு உவமை கூறப்பட்டது; ஒளிநிறைந்த முருக்கமலர், மாதுளம்பூ ஆகியன பெண்ணின் அதரங்களுக்கு உவமை கொள்ளப்பட்டன.

மாமரத்தின் ஒளிரும் முற்றாத இளம் தளிர் அவளுடைய கைகளாகும்; மாவடுக்கள் அவளுடைய விழிகளாவன. இவ்வாறு மங்கைக்கு உவமை கூறப்படும் உறுப்புகளைக் கொண்டமையால் இச்சோலையே ஒரு பாவைக்கு நிகராகும் என்று கூறுகிறார்.

சிவமலை எனப்படும் சோலை இவ்வாறு ஓர் இளம் பெண்ணுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. சோலையின்கண் காணும் கொண்டல் முதலான பதினான்கு உறுப்புகளை ஓர் இளம் பெண்ணின் பதினோர் உறுப்புகளுக்கு நிரல்நிறையாகக் கூறுகிறார் புலவர்.

"சிவமலைப் பிள்ளைத்தமிழ்' எனும் நூலில் இப்பாடல் அமைந்துள்ளது.

கொண்டல்வெண் திங்கள்கிளி கோகிலம்

 தோகைமயில் குலவலான் முல்லைமலரும்

 கோங்கின தரும்பும் குரும்பையும்

 வஞ்சியங் கொம்பும்வல் லிக்கொடியுநேர்

 மண்டிவளர் கந்தியும் கேழ்கிளர்

 முருக்கலரும் மாதுளம் போதுமுதிரா

 மாவின்மிளிர் தளிருமொளிர் வடுவுமுடன்

 மருவலான் மருமலர்க் குழலுமுகமும்

 பண்டிகழு மொழியுமவிர் சாயலும் முறுவலும்

 பணைமுலையும் ஒசியுமிடையும்

 பகர்களமும் அதரமும் பாணியும் விழியும்

 படைத்தவோர் பாவைநிகராம்

 தண்டலை நெருங்கிவளர் பட்டாலி நகராதிப

 சப்பாணி கொட்டி யருளே!

பாடல் முழுவதுமே உவமைகளாலும் அனைத்து உவமைகளும் நிரல்நிறையாகவும் பாடப்பட்டுள்ளமை மற்றொரு சிறப்பாகும்.

இப் பிள்ளைத்தமிழை இயற்றியவர் பெயர் அறிய முடியவில்லை. நூலும் முழுமையாகக் கிடைக்கவில்லை. இருப்பினும் கிடைத்த பத்துப் பாடல்களைத் தொகுத்து, அவற்றின் நயத்தை அனைவரும் படித்து மகிழ்வதற்காக,  முதுபெரும்புலவர் வித்துவான் வே.ரா.தெய்வசிகாமணி இதனை பதிப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.                                                                  

Fri, 10/11/2019 - 08:15


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக