பாண்டிருப்பு திரௌபதையம்மன் தீமிதிப்பு இன்று

மகாபாரத இதிகாசத்தை அடியொற்றியதாக 18 தினங்கள் நடைபெறும் பாண்டிருப்பு ஸ்ரீதிரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் தீமிதிப்பு வைபவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறவுள்ளது.

இத்தீமிதிப்பு வைபவத்தைக் காண நாட்டின் நாலாபாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாண்டிருப்புக்கு வருவது வழக்கமாகும். இம்முறையும் அதிகளவிலான பக்தர்கள் பாண்டிருப்பில் ஒன்றுகூடியுள்ளனர்.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தில் விண்முட்ட எழுகின்ற தீயின் வேள்வியினால் இக்கிராமத்தின் கீர்த்தி எங்கும் பரவி நிற்கின்றது. எந்தவொரு இந்து ஆலயங்களிலும் இல்லாத பெருமை இங்குள்ள தீக்குழிக்கு உள்ளது. 21அடி நீளமும் 3அடி ஆழமும், 4அடி அகலமும் கொண்ட தீக்குழியாக இது அமைந்துள்ளது.இத்தீயின் வேள்வியினாலே 'தீப்பள்ளயம்' என அழைக்கப்படுகின்றது.

பூசாரிமார், பாண்டவர்கள், திரௌபதை சகிதம் தேவாதிகள் அனைவரும் மேனியெங்கும் மஞ்சள் பூசிக் கொண்டு ஆன்ம ஈடேற்றம் கருதி தீக்குளியில் இறங்குகின்ற காட்சியினை காண பக்தர்கள் திரண்டுள்ளனர்.

'அரோஹரா ஓசை விண்ணைப் பிளக்க உடுக்கை, சலங்கை, பறை, மங்கள வாத்தியங்கள் முழங்க தீமதிப்பு வைபவம் பாண்டிருப்பில் நடைபெறுகின்றது. இங்கு அனைவரும் தீமிதிப்பில் ஈடுபட முடியாது. குறிப்பாக பெண்கள் தீமிதிக்க அனுமதியில்லை. ஆலய உற்சவம் ஆரம்பித்த நாட்கள் தொடக்கம் 18 தினங்கள் ஆலய வளாகத்திலே தங்கி நின்று பக்திபூர்வமாக கட்டுக்கு நின்று(பூசை வழிபாடுகளில்) அம்மனை வழிபடுபவர்கள் மாத்திரமே தீயில் இறங்குவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள்.

600 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் இருந்து வருகை தந்த தாதன் எனும் மாமுனிவர் அமைத்த மகாசக்தி ஆலயமான திரௌபதை அம்மன் ஆலயத்தில் அம்மகாமுனி வகுத்துத் தந்த விதிமுறைகளுக்கு அமையவே தீமிதிப்பு உட்பட அனைத்து உற்சவங்களும் முறையாக நடைபெற்று வருகின்றன.

ஆகமம் சார்ந்த ஆகமம் சாராத வழிபாட்டு முறைகள் இங்கு நடைபெறுகின்றன. தீக்குழிக்கு முன்பு வைக்கப்படும் கிருஷ்ணர், அம்மன் மேடையானது பாண்டவர்கள் தீயில் இறங்கும் போது வைகுண்டம் போவதாகவே உணர்த்தி நிற்கின்றது. தீமிதிப்பு நடைபெற்றதும் தெய்வம் ஏறப் பெற்றவர்களுக்கு மோட்சம் கிடைக்கவென இங்கு சாட்டை அடி வழங்கப்படுகின்றது. இந்த அற்புதக் காட்சியைக் காணவென பக்தர்கள் தவம் கிடப்பர்.

தீ மிதிப்பு நிறைவு பெற்ற பின்னர் மறுநாள் சனிக்கிழமை தருமருக்கு முடி சூட்டும் வைபவம் நடைபெற்று தீக்குழிக்கு பால் வார்க்கும் சடங்குடன் இரவு அம்மனின் தெற்கு நோக்கிய ஊர்வலத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறுகின்றது. பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவம் மகாபாரத போரை நினைவு கூரும் வகையிலே உள்ளது.

வாழ்க்கை ஒரு போர்க் களம். அதை தருமநெறியில் வாழ்ந்தால் மோட்ச நிலை கைகூடும் என்பதே இங்கு நடைபெறும் தீமிதிப்பின் தத்துவமாகும்.

 

செ.துஜியந்தன்
(பாண்டிருப்பு தினகரன் நிருபர்) 

Fri, 10/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக