ஊர்காவற்றுறையிலிருந்து எழுவைதீவு அனலைதீவுகளுக்கான படகுச் சேவை

ரூ.137 மில்.பெறுமதியான  எழுதாரகை படகு கையளிப்பு

தேசிய கொள்கைகள் பொருளாதார அமைச்சின் நிதியில், ஊர்காவற்றுறையிலிருந்து எழுவைதீவு மற்றும் அனலைதீவுக்கான பயணிகள் படகு சேவையை ஆரம்பிப்பதற்காக ரூபா 137 மில்லியனில் எழுதாரகை படகு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி, இதை யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஊடாக ஊர்காவற்றுறை பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இப்படகில் ஒரே தடவையில் 100 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதிகளுள்ளன. தீவுப்பகுதிகளையும் யாழ் மாவட்டத்தையும் இணைக்கும் பிரதான போக்குவரத்தாக இப்படகுச் சேவை கருதப்படுகிறது. இதன் மூலம் தீவுப் பகுதிகளின் பொருளாதார நடவடிக்கைகள் வலுப்பெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சேவையாகவும் இது அமைகின்றது.

இந் நிகழ்வில் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மேலதிக யாழ் மாவட்ட செயலாளர் எஸ். முரளிதரன், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி. மஞ்சுளாதேவி சதீஸன் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பளர் மற்றும் பிரதேச மக்களும் கலந்து கொண்டனர்.

காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட 48 வீடுகளில் 21 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு எழுவைதீவு, அனலைதீவு மற்றும் ஊர்காவற்றுறை கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. மாதகல் காஞ்சிபுரம் வீதி (2,200 மீற்றர்கள்) 20 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதியால் மக்கள் மயப்படுத்தப்பட்டது.

 

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை