வயோதிபர் மடம் போன்றது இலங்கை பாராளுமன்றம்

ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க

இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றால் வயோதிபர் மடத்திற்கு செல்வது போன்று காணப்படுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி ஏற்பாடு செய்த தேர்தல் பிரசாரக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு வாழைச்சேனை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசிய கட்சி இந்த நாட்டில் 37 ஆண்டுகள் ஆட்சி செய்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த நாட்டினை 34ஆண்டுகள் ஆட்சி செய்தது.

இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவார்கள் என நம்புகின்றீர்களா. இவர்களால் முடியாது.

பொருளாதாரம் வீழ்ச்சி, யுத்தத்தினை ஏற்படுத்தினார்கள், கல்வியை சீர்குலைத்தார்கள், சுகாதாரத்தை சீர்குலைத்தார்கள், விவசாயத்தை சீரழித்தார்கள், கந்தளாய் சீனித் தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை என சிலவற்றை விற்றார்கள், சிலவற்றை மூடினார்கள்.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருக்கின்றதா தற்போது அது இல்லை. இதனை மூடி நாசம் செய்தார்கள். இவர்கள் உங்களுக்கு வேனுமா, இந்த நாட்டில் ஆட்சி செய்தவர்கள் நாசம் செய்து விட்டார்கள்.

இந்த நாட்டை கட்டியெழுப்பி தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். முப்பது வருட யுத்தத்தினால் எமது நாடு சீர்குலைந்துள்ளது, இன்னும் எமக்கு யுத்தம் வேண்டுமா, இந்த நாட்டில் 71 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் என்ன செய்தார்கள். இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றை செய்தார்கள், நாட்டை நாசமாக்கினார்கள்.

நாங்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் எந்த பேதமும் இல்லாமல், இனவாதம், அடிப்படை வாதங்களுக்கு இடம்கொடுக்க மாட்டோம். நாங்கள் இனவாதிகள், அடிப்படைவாதிகளை வைத்துக் கொள்வதில்லை.

2015ம் ஆண்டு நாங்கள் மகிந்தவை தோற்கடித்தோம். பசில் ராஜபக்ஷ துண்டை கழற்றி விட்டு அமெரிக்காவுக்கு ஓடினார். கோட்டாபய ராஜபக்ஷ யானைகளை சரணாலயத்தில் ஒப்படைத்து விட்டு வீட்டுக்கு போனார். மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்.

ரவூப் ஹக்கீம், வருவார் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள், ஐந்து வருடங்கள் வேலை செய்ய முடியாமல் போய் விட்டது. கோட்டாபயவை காப்பாற்றியவர் சஜித். பாராளுமன்றத்தில் கோட்டாபயவிற்கு எதிராக ஏதும் பேசினாரா, முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடாத்தும் போது சஜித் பேசினாரா, எங்கே போனார். இவர் கோட்டாபயவின் நண்பன்.

மக்களை துன்பப்படுத்தும் போது, ஊடகவியலாளர்களை கொலை செய்யும் போது சஜித் எங்கே போனார். ஆனால் நாங்கள் உங்களுக்காக பேசிக் கொண்டிருக்கின்றோம். சஜித் வாயை மூடிக் கொண்டு இருக்கின்றார்.

தேர்தல் பிரசாரத்தில் கோட்டாபயவின் பெயரை உச்சரிக்காமல் எதிர் வேட்பாளர் என்றுதான் கூறுகின்றார்.

இந்த நாட்டினை ஆட்சி செய்பவர்கள் யார் வயோதிபர்கள்தான். பாராளுமன்றதிற்கு சென்றால் வயோதிபர் மடத்திற்கு செல்வது போன்று காணப்படுகின்றது.

வயது போனவர்கள் செய்வதற்கு பலவேலைகள் உள்ளன. அது பாராளுமன்றம் இல்லை. அவர்களுக்கு காது கேட்பது குறைவு.

வீட்டில் பிள்ளைகளை பாத்துக் கொள்ளுங்கள். புதிய தலைமுறையினருக்கு நாட்டை வழங்குங்கள். இந்த வேலைத் திட்டங்களை நாங்கள் மேற்கொள்வோம்.

நாட்டில் இடைநடுவில் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் விலை ஐநூறு கோடியை தாண்டியது என்றார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னியின் கல்குடா செயற்குழுவின் செயலாளர் ரிப்கான் ரபாய்தீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் கந்துரெத்தி, ஜயவர்த்தனபுர பல்கலைக் கழக விரிவுரையாளர் அனில் ஜெயந்த, நல்லாட்சிக்கான தேசிய முன்னியின் தேசிய அமைப்பாளர் எம்.நஜாமுகமட், பிரதேச சபை உறுப்பினர் எஸ்.அஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்குடா தினகரன் நிருபர்

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை