கிழக்கு அபிவிருத்தி காண வேண்டுமானால் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்குங்கள்

வாழைச்சேனை  பிரதேச சபை தவிசாளர்  ஸோபா ஜெயரஞ்சித்

கிழக்கு மண் அபிவிருத்தி காண வேண்டுமாக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆதரவு வழங்குவதன் மூலம் கிழக்கு மக்களுக்கு விடிவு கிடைக்கும் என வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து வாழைச்சேனை பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,- நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு செய்த சேவைகளை சிந்தித்து பார்க்க வேண்டும். இவர்கள் ஒரேயொரு செயலை சிறப்பாக செய்துள்ளனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தனை சிறையில் அடைந்து கட்சியை முடக்கி விடலாம் என்று பார்த்தார்கள். ஒரு பிள்ளையானை அடைத்தால் பல பிள்ளையான்கள் பிரதேசத்தில் உருவாவார்கள் என்பதை குறித்த நிகழ்வு எடுத்துக் காட்டுகின்றது.

இதுவரை காலமும் எங்களை ஏமாற்றி பசப்பு வார்த்தைகளால் அடக்கி வந்த தமிழ் கட்சிகளை ஏன் அந்த காலத்தில் ஆதரித்தோம் என்றால் அடுத்து தெரிவு எங்களுக்கு இல்லாமல் இருந்தது. தமிழர்கள் தலைநிமர்ந்து நிற்கக் கூடிய, தமிழர்களின் இருப்பை நிலை நிறுத்தக் கூடிய, தேவைகளை நிறைவு செய்யக்கூடிய ஒரு கட்சியாக தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மண்ணில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் கிழக்கு மண் அபிவிருத்திகளை காண வேண்டுமாக இருந்தால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஆதரவு வழங்குவதன் மூலம் விடிவும் கிடைக்கும்.

கடந்த காலங்களில் எங்களுக்கு அபிவிருத்திப் பணிகளோ, அபிவிருத்தி செயற்பாடுகளோ இடம்பெறவில்லை. காரணம் எமது தலைமையை தீர்மானிப்பது வடக்கு மாகாணமாக இருந்தது. பிள்ளையான் தலைமையில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ் மக்களின் அபிலாசைகளை எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றும் என்பது எண்ணம்.

ஜனாதிபதி தேர்தலில் எங்களது வாக்குகளை பொதுஜன பெரமுனவுக்கு வழங்கி எங்களது நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு கிழக்கு மக்களின் அபிலாசைகளையும், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆதரவினை வழங்க வேண்டும். இதன் மூலம் எமது தலைவர் பிள்ளையானின் விடுதலை விரைவில் கிடைக்கும் என்பதே உண்மை என்றார்.

 

கல்குடா தினகரன் நிருபர்

 

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை