இருவரை கைது செய்த அமெரிக்க இராணுவம்

பக்தாதி கொல்லப்பட்ட சம்பவம்:

சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு தலைவர் அபூபக்கம் அல் பக்தாதி கொல்லப்பட்ட தேடுதல் வேட்டையின்போது அமெரிக்க இராணுவம் இருவரை கைது செய்ததாக அந்நாட்டு இராணுவ தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

அவர்கள் தற்போது தடுப்புக் காவலில் இருப்பதாக கூட்டு தலைமை அதிகாரி ஜெனரல் மார்க் மில்லி குறிப்பிட்டுள்ளார். பக்தாதியின் சடலம் அகற்றப்பட்டதாகவும் அது தொடர்பான புகைப்படங்களை வெளியிட திட்டம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த தேடுதல் வேட்டையின்போது பக்தாதி தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்கா குறிப்பிட்டது.

“மரபணு சோதனையுடன் அடையாளம் காண்பதற்காக பக்தாதியின் உடல் எச்சங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது. அவரது உடல் அகற்றப்பட்டுவது முறையான வகையில் கையாளப்பட்டது” என்று ஜெனரல் மார்க் மில்லி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் “இரகசிய நடைமுறை” ஒன்றுக்கு உட்படுத்தப்படும் என்று அமெரிக்க இராணுவத்தின் உயர் நிலை அதிகாரிகளில் ஒருவரான ஜெனரல் மில்லி கூறினார்.

எனினும் இந்த தேடுதல் வேட்டையின் சில காட்சிகள் வெளியிடப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் சம்பவ இடத்தில் இருந்து பிடிபட்ட நபர்கள் பற்றிய விபரங்களை அமெரிக்கா வெளியிடவில்லை. அமெரிக்க இராணுவத்தின் நாய்கள் துரத்திபோது நிலத்திற்கு கீழுள்ள பதுங்கு குழுயின் முடிவில் தான் அணிந்திருந்த வெடிபொருட்கள் நிரப்பிய அங்கியை வெடிக்கச் செய்து பக்தாதி தற்கொலை செய்து கொண்டார் என்று டிரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டார்.

இதேவேளை தமது உளவாளி ஒருவர் திருடிய பக்தாதியின் உள்ளடையே அவரை அடையாளம் காண்பதற்கான மரபணு சோதனைக்கு உதவியதாக குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படை குறிப்பிட்டுள்ளது.

ஐ.எஸ் தலைவரை கண்டிபிடிப்பதில் சிரிய ஜனநாயகப் படையினர் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் இது பற்றி அமெரிக்கா பெரிதும் பேசவில்லை.

இந்நிலையில் சிரிய ஜனநாயகப் படை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தி ஒன்றில் குறிப்பிட்டிருப்பதாவது, “பக்தாதியை கண்டுபிடித்தது மற்றும் அவரை அடையாளம் காணப்படும் அனைத்து உளவுச் செயற்பாடுகளும் எம்முடைய பணியாகும். இந்தத் தாக்குதல் வெற்றி பெறுவதற்கு எமது உளவுப் பிரிவினர் கடைசி நிமிடம் வரை ஒருங்கிணைந்து, வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டியதோடு பங்களிப்புச் செய்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மே 15 ஆம் திகதி தொடக்கம் பாக்தாதி இருக்கும் இடத்தை அவதானிப்பதற்கு சி.ஐ.ஏ உடன் இணைந்து செயற்பட்டதாக சிரிய ஜனநாயகப் படையின் மூத்த உறுப்பினரான பொலட் கான் குறிப்பிட்டுள்ளர்.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை