‘ஏ.டி.பி உலக தொடர் 500’ ரோஜர் பெடரர் சம்பியன்

ஜாம்பவான் ரோஜர் பெடரரின் கைகளை சம்பியன் கிண்ணம் அலங்கரித்தவாறு சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.

சுவிஸ்லாந்தின் பாஸல்லில் நடைபெற்ற ‘ஏ.டி.பி உலக தொடர் 500’ என்ற வகைக்குள் அடங்கும் இத்தொடர், ஆண்களுக்கே உரித்தான ஒரு தொடராகும்.

உள்ளரங்க கடினத்தரையில் நடைபெறும் இத்தொடரின், 50ஆவது அத்தியாயம் கடந்த 21ஆம் திகதி முதல் நேற்றுமுன்தினம் வரை நடை பெற்றது.

இதில் சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியின் முடிவினை பார்க்கலாம்,

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், அலெக்ஸ் டி மினியூர்ரை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டில் எவ்வித சவாலையும் எதிர்கொள்ளாத ரோஜர் பெடரர், செட்டை 6- – 2 என எளிதாக கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், அலெக்ஸ் டி மினியூர், ரோஜர் பெடரருக்கு நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அந்த எதிர்பார்ப்புக்களை தவிடுபொடியாக்கிய ரோஜர் பெடரர், இரண்டாவது செட்டையும் 6- – 2 என இலகுவாக கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றார்.

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரில், ரோஜர் பெடரர் பெற்றுக் கொண்ட பத்தாவது சம்பியன் பட்டமாகும்.இதற்கு முன்னதாக ரோஜர் பெடரர், 2006, 2007, 2008, 2010, 2011, 2014, 2015, 2017, 2018ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டில் பெரிதளவில் சாதிக்காத ரோஜர் பெடரருக்கு, இந்த சம்பியன் கிண்ண ஆண்டு இறுதியில் மிகப்பெரிய உட்சாகத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது.

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை