மேல்மாகாணம் முதலிடம்

சிறந்த வீரர் உஷான் பெரேரா

சிறந்த வீராங்கனை ஹசினி சுகந்தி

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 2019 ஆம் ஆண்டுக்கான 45 ஆவது தேசிய விளையாட்டு விழா விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் (27) கோலாகலமாக நிறைவுபெற்றது.

தொடர்ந்து நான்கு நாட்களாக பதுளை வின்சன்ட் டயஸ் மைதானத்தில் நடைபெற்ற இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளானது சீரற்ற காலநிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், போட்டிகளில் இறுதியில் எந்தவொரு தேசிய சாதனையும், போட்டிச் சாதனையும் முறியடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுநர் வீரருக்கான விருதை மேல் மாகாணத்தைச் சேர்ந்த உயரம் பாய்தல் வீரர் (2.12 மீற்றர்) உஷான் திவங்க பெரேரா பெற்றுக்கொண்டதுடன், வருடத்தின் அதி சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனைக்கான விருதை மேல் மாகாணத்தைச் சேர்ந்த 110 மீற்றர் சட்டவேலி ஓட்ட வீராங்கனை (13.90 மீற்றர்) ஹசினி லக்ஷிகா சுகந்தி பெற்றுக்கொண்டார். தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் தமது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகின்ற மேல் மாகாணம், இம்முறை தேசிய விளையாட்டு விழாவிலும் ஒட்டுமொத்த சம்பியன் பட்டத்தை வென்றது.

இதில் 99 தங்கம், 78 வெள்ளி மற்றும் 81 வெண்கலப் பதக்கங்களை வென்று மேல் மாகாணம் முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, 51 தங்கம், 38 வெள்ளி, 60 வெண்கலப் பதக்கங்களை வென்ற மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 32 தங்கம், 33 வெள்ளி மற்றும் 44 வெண்கலப் பதக்கங்களை வென்ற வடமேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், 8 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலப் பதக்கங்களை வென்ற கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்களை வென்ற வட மாகாணம் கடைசி இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இம்முறை தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநரில் கிழக்கு மாகாண அணி 3 தங்கம், மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கங்களை வென்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல வெற்றிகளை ஈட்டிவருகின்ற பொத்துவில்லைச் சேர்ந்த அஷ்ரப் தலைமையிலான 4 x 100 அஞ்சலோட்ட அணி வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்தது.

அத்துடன், நிந்தவூரைச் சேர்ந்த ஆஷிக் ஆண்களுக்கான தட்டெறிதலில் தங்கப் பதக்கத்தையும், அம்பாறையைச் சேர்ந்த நந்தசேன, பெண்களுக்கான 10 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டார்.

குழுநிலைப் போட்டிகளில் கிழக்கு மாகாண அணி, பெண்களுக்கான கடற்கரை கபடி, பெண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்டம், ஆண்களுக்கான கராத்தே மற்றும் ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வெற்றி கொண்டது. அத்துடன், பெண்களுக்கான பளுதூக்கலில் முதல் தடவையாக வெண்கலப் பதக்கத்தினையும் அந்த மாகாணம் பெற்றுக் கொண்டது.

கோலூன்றிப் பாய்தலில் தமது ஆதிக்கத்தை அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்ற வட மாகாண வீரர்களுக்கு இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் எதிர்பார்த்தளவு வெற்றிகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

குறிப்பாக 100 இற்கும் குறைவான மெய்வல்லுனர் வீரர்களுடன் களமிறங்கிய வட மாகாண அணிக்கு இம்முறை போட்டித் தொடரில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை மாத்திரமே வெற்றிகொள்ள முடிந்தது.

இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வடக்கின் நட்சத்திர வீராங்கனையான அனித்தா ஜெகதீஸ்வரன் தங்கப் பதக்கத்தையும், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியைச் சேர்ந்த ஏ. புவிதரன் வெள்ளிப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்.

இந்த நிலையில், குழுநிலைப் போட்டிகளில் ஆண்களுக்கான கபடி, பெண்களுக்கான மேசைப்பந்து, பெண்களுக்கான கெரம், ஸ்டேன்டர்ட் சைக்கிளோட்டம் போட்டிகளில் வட மாகாண அணி 2ஆவது மற்றும் 3ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் ஒரு தங்கம் மற்றும் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும் அந்த மாகாணம் வென்றுள்ளது. தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதல் தடவையாக ஆண்களுக்கான கால்பந்தாட்டத்தில் வடக்கு மாகாண அணி தங்கப் பதக்கத்தினை வென்று வரலாறு படைத்தது.

45ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாள் மெய்வல்லுநர் போட்டிகளில் வருடத்தின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் 100 மீற்றர் ஓட்டப் போட்டி முக்கிய இடத்தை வகித்தது.

இதில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சுபேஷ் விக்ரமசிங்க தங்கம் வென்றார். போட்டித் தூரத்தை இவர் 10.85 செக்கன்களில் நிறைவு செய்தார். இவர் ஆண்களுக்கான 200 மீற்றரிலும் தங்கப் பதக்கம் வென்றார்.

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மத்திய மாகாணத்தைச் சேர்ந்த அமாஷா டி சில்வா, இம்முறை தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை நிறைவு செய்ய 12.13 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

தென் மாகாணத்தைச் சேர்ந்த ருசிரு சத்துரங்க ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்றார். போட்டியை நிறைவுசெய்ய 3 நிமிடங்களும் 57.9 செக்கன்களை அவர் எடுத்துக் கொண்டார்.

போட்டித் தூரத்தை 3 நிமிடங்களும் 58.4 செக்கன்களில் ஓடி முடித்த மத்திய மாகாணத்தைச் சேர்ந்த இந்துனில் ஹேரன் வெள்ளிப் பதக்கத்தினையும், வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த எஸ். லக்மால் வெண்கலப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்.

Tue, 10/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை