விசேட தெரிவுக்குழு அறிக்கை 23 ஆம் திகதி சமர்ப்பிப்பு

24 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் 23ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கவிருப்பதாக தெரிவுக்குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஏ.ஜே.ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

இச் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 60ற்கும் அதிகமானவர்களிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியிலுள்ள காரணங்கள் மற்றும் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் இது குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற் கான பாராளுமன்ற விசேட குழு கடந்த மே மாதம் 22ஆம் திகதி சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்டது. இக்குழு முதற்தடவையாக மே மாதம் 29ஆம் திகதி கூடியிருந்ததுடன், இறுதியாக எதிர்வரும் 17ஆம் திகதி கூடவுள்ளது. இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்த எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்.

 

Sat, 10/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை